விடுதலைப் புலிகள் ஆதரவு கருத்து தமிழ் பெண் அமைச்சர் ராஜினாமா

கொழும்பு: விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் கடும் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கை தமிழ் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவையில் இடம் பெற்ற ஒரே தமிழ் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். வடக்கு பிராந்தியத்தை சேர்ந்த இவர், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தார். கடந்த 2 ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயகலா, ‘2009 மே 18ம் தேதிக்கு முன், நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போதைய சூழலில் நாம் சுதந்திரமாக நடமாட வேண்டுமென்றால், பள்ளி சென்ற நம் குழந்தைகள் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டுமென்றால் மீண்டும் விடுதலைப் புலிகளை மறுமலர்ச்சி பெற்று திரும்ப கொண்டு வர வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்’’ என்றார்.

இது கடும் சர்ச்சையை கிளப்பியது. அரசியலமைப்புக்கு எதிராக பேசிய விஜயகலா உடனடியாக பதவி விலக வேண்டுமென நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. இதுதொடர்பாக, அட்டர்னி ஜெனரல் விசாரணை நடத்த சட்ட அமைச்சகமும் உத்தரவிட்டது.இந்நிலையில், விஜயகலா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நேற்று (நேற்று முன்தினம்) மாலை 5 மணி அளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவே பதவி விலகி உள்ளேன். அதே நேரத்தில், விசாரணை முடியும் வரை என்னை யாரும் பதவியிலிருந்து நீக்க முடியாது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்’’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: