மூல வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு, அக். 27: வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் மூல வைகை ஆற்றில் கலந்து வருகிறது. மழை பெய்யும் நேரங்களில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து பிளாஸ்டிக் குப்பைகளும் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே ஆற்றின் அருகே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், பெரும்பாலானோர் ஆற்றில் அமர்ந்து மது குடித்து விட்டு, பாட்டில்களை மூல வைகை ஆற்றில் உடைத்து வீசுகின்றனர். ஆற்றின் வழியாக தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகளின் கால்களை உடைந்த மதுபாட்டில்கள் பதம் பார்த்து விடுகிறது. எனவே ஆற்றில் மது அருந்துவதைத் தடுப்பதுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்ற வேண்டும் என்றும், சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாக்கடை கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூல வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: