முதல்வரின் சீரிய முயற்சியால் எங்கும் இல்லாத திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

காரைக்குடி, ஜூலை 31: காரைக்குடியில் மருத்துவத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. இயக்குநர் செல்வவிநாயகம் வரவேற்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விழா பேருரையாற்றினார். கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் பங்கேற்றார். எம்எல்ஏக்கள் மாங்குடி, தமிழரசி ரவிகுமார், நகராட்சி சேர்மன் முத்துத்துரை வாழ்த்துரை வழங்கினர். விழாவில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு தேவையான 11 புதிய கட்டிடங்கள் ரூ.5.65 கோடியில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 70 மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். சிவகங்கையில் 4 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுதுவம் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்களில் இருதய பாதிப்பு என வருபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முதல்வரின் சீரிய முயற்சியில் லோடிங் டோசஸ் மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இருதயம் காப்போம் திட்டத்தின் மூலம் 9,736 பேர் உயிர் பெற்றுள்ளனர்.

அதுபோல அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு,வெறிநாய் கடிக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளது. இதுபோன்ற திட்டம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை. தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது கடந்த 2012ல் துவங்கப்பட்டது. கடந்த 7 வருடங்களில் 69 விருதுகள் தான் கிடைத்துள்ளது. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தியதின் விளைவாக கடந்த 3 ஆண்டுகளில் 543 விருதுகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்துர் கேஎஸ்.ரவி, கலைஞர் தமிழ்சங்க செயலாளர் பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி, சோனாகருப்பையா, நகராட்சி கவுன்சிலர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா நன்றி கூறினார். இதுபோல் தேவகோட்டை ஒத்தக்கடை பகுதியில் நகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். தேவகோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தினேஷ் வரவேற்றார். நகராட்சி ஆணையாளர் பார்கவி, நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் பாலமுருகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

The post முதல்வரின் சீரிய முயற்சியால் எங்கும் இல்லாத திட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: