மார்லிமந்து அணையில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

ஊட்டி: மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி மற்றும் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வரத் துவங்கி உள்ளன. இதனால், அடிக்கடி மனித- விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதில், ஏராளமான பொதுமக்கள் பாதிக்கின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்லிமந்து அணையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதகிளில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் வேட்டையாடப்படுவதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினமும் நவநகர் பேலஸ் பகுதியில் கால்நடைகளை மர்ம விலங்குகள் வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மார்லிமந்து அணையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, சில செந்நாய்கள் எதனையே துரத்திச் செல்வதை பார்த்துள்ளனர். அருகில் சென்று பார்த்த போது, ஒரு புலியை செந்நாய்கள் துரத்தி செல்வதை பார்த்து அதிர்ந்துள்ளனர். இதனை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட வனத்துறையினர் நேற்று வனச்சரகர் ரமேஷ் தலைமையில் மார்லிமந்து அணைப் பகுதிக்கு சென்றனர். அங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். புலியின் கால் தடம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களை மரங்களில் பொருத்தினர்.தொடர்ந்து வனச்சரகர் ரமேஷ் கூறுகையில்,“மார்லிமந்து பகுதியில் சிலர் புலியை பார்த்துள்ளனர். இதுவரை இந்த புலி நடமாட்டத்தால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. இருப்பினும், இந்த அணை மற்றும் வனத்தை சுற்றி குடியிருப்புகள் உள்ளதால், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் யாரும் மார்லிமந்து அணை பகுதிக்கு செல்ல வேண்டாம். கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்….

The post மார்லிமந்து அணையில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: