மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்-அதிகாரிகள் சமரசம்

போச்சம்பள்ளி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கமலாபுரம் பகுதியில் பொது இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மயானம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கமலாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை எடுத்துச் சென்றனர்.ஆனால், மயானத்திற்கு செல்லும் பாதையில் வேலி போட்டிருந்ததால் அவ்வழியாக செல்ல முடியவில்லை. இதனால், வேலியை அப்புறப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தனர். அவரோ, தனது பட்டா நிலத்தில் வழித்தடம் உள்ளதாக கூறி, வேலியை அகற்ற முடியாது என கூறிவிட்டார். அதனைக்கேட்டு ஆத்திரமடைந்த கிராம மக்கள் சடலத்துடன் சாமல்பட்டி-மத்தூர் சாலையில் கமலாபுரம் கூட்ரோடு பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போச்சம்பள்ளி தாசில்தார் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைக்கப்பட்டிருந்த வேலியை அகற்றி சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு, இறந்தவரின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்று, அடக்கம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்-அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: