சென்னை: சென்னையில் அடுத்தடுத்த இடங்களில் தனியார் வங்கிகளின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை பாரதி சாலை அருகே உள்ள அமீர் மஹால் எதிரே ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்திற்குள் புகுந்து நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளார். அப்போது, மும்பையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலாரம் ஒலித்துள்ளது.உடனே, வங்கி கட்டுப்பாட்டு அறையில் இருந்த வங்கி ஊழியர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஏடிஎம் இயந்திரம் அமைந்துள்ள இடத்தை கூறி யாரோ உள்ளே புகுந்து இயந்திரத்தை உடைப்பதாக தகவல் தெரிவித்தனர்.
தகவலின்படி, அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். போலீசார், அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்து இரும்பு கம்பி, ஸ்கூட்டர் ஒன்றும் பறிமுதல் ெசய்யப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டதால் பல லட்சம் ரூபாய் தப்பியது.பின்னர் பிடிபட்ட வாலிபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர் ராயப்பேட்டை ஜான் ஜானிகான் தெருவை சேர்ந்த ஷேக் சுலைமான் பாஷா (20) என்பதும், அவர் தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பிடிபட்ட கல்லூரி மாணவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தி.நகர் வெங்கட் நாராயண சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம்ஐ உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்ததும், பலமுறை முயன்றும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் இந்த ஐசிஐசிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க வந்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மெர்க்ன்டைல் வங்கி ஏடிஎம் சென்று பார்த்த போது இயந்திரம் சேதமடைந்தது தெரியவந்தது. உடனே வங்கி மேலாளர் நாச்சியப்பன் (47) சம்பவம் குறித்து இரவு காவலாளி கண்ணன் (66) என்பவரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது, கண்ணன் ஓய்வு அறைக்கு சென்று இருந்த போது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி நடந்தது தெரியவந்தது.பின்னர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் நாச்சியப்பன் புகாரின்படி, மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து, கல்லூரி மாணவனிடம், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!