மதுரை ஜிஹெச்சில் தேசிய சித்த மருத்துவ தின விழா

மதுரை, ஜன. 9: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ துறையில் தேசிய சித்த மருத்துவ தின விழிப்புணர்வு விழா நடந்தது. தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, மதுரை அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் சைராபானு தலைமை வகித்து மகளிர் நலன் மற்றும் மகப்பேறு பிரச்னைகள், நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியில் பாரம்பரிய ஊட்டச்சத்து உணவுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாசிப்பயறு, கொண்டக்கடலை, சுண்டல், கடலைமிட்டாய் மாதுளம் பழம் உள்ளிட்டவை மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை தரும் கபசுர குடிநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை மருந்தாளுநர் மீனாதேவி செய்திருந்தார். மேலும் நிகழ்ச்சியில் சித்த மருத்துவ ஆத்திச்சூடி கூறும் உடல், மன ஆரோக்கியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் ‘அதிகாலை விழி. ஆசனம் பழகு.

ஒரு நிலைப்பட்ட மனமே தியானம். ஐம்புலன்களின் சமச்சீர் நிலை உடல், மன ஆற்றலை பெருக்கும். ஈறு வலிமைக்கு திரிபலா சூரணம், தேகப் பொலிவுக்கு எண்ணெய் குளியல், இஞ்சி கற்பம் காலையில் புசி. உண்ணும் உணவே மருந்து. மருந்து போல் உணவை அளவாக எடுத்துக் கொள். ஒளவைக்கு மட்டுமல்ல நெல்லி அனைவருக்கும் காயகற்பம், ஊளை சதை குறைய நடைபயிற்சி செய் போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடித்தால் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று சித்த மருத்துவ ஆத்திச்சூடி வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

The post மதுரை ஜிஹெச்சில் தேசிய சித்த மருத்துவ தின விழா appeared first on Dinakaran.

Related Stories: