மக்களின் குரல்

மக்களவையில் விலை வாசி உயர்வை எதிர்த்து குரல் கொடுத்த 4 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதே வேகத்தில் மாநிலங்களவையில் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மை, பொதுமக்கள் அன்றாடம் வாங்கும் அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி உயர்வை எதிர்த்து அவைத்தலைவரின் உத்தரவையும் மீறி அவையில் குரல் கொடுத்ததால் இந்த நடவடிக்கை பாய்ந்து இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் கடந்த வாரம் பெரும்பான்மையான அவை நேரங்கள் முடங்கி விட்டன. தொடர்ந்து அவர்கள் அவைக்குள் கோஷம் எழுப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டன. இந்த வாரம் தொடங்கியதும் அதே நிகழ்வுதான். சமையல் காஸ் விலை உயர்வு, கோதுமை, அரிசி, மோர், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்ததை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி அவையில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள் எதிர்க்கட்சி எம்பிக்கள். அவையை ஒத்தி வைத்து விட்டு விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. மக்கள் குரலாக அவர்கள் அவையில் பிரதிபலிக்கிறார்கள்.ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம் அடைந்து அவைக்கு திரும்பியதும் விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க தயார் என்று அரசு தரப்பில் விளக்கம் கொடுத்தும் எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. மக்கள் பிரச்னை பற்றி உடனே விவாதிக்க வேண்டும், காலந்தாழ்த்த வேண்டாம் என்பது அவர்கள் கருத்து. இந்தநிலையில் அவைத்தலைவரின் எச்சரிக்கையை மீறியதாக கூறி மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் ஆகஸ்ட் 12ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதே வேகத்தில் மாநிலங்களவையிலும் அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சுஷ்மிதா தேவ், மவுசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வார், முகமது நதிமுல் ஹக், திமுக எம்பிக்கள் அப்துல்லா, கல்யாண சுந்தரம், கிரிராஜன், என்ஆர் இளங்கோ, சண்முகம், கனிமொழி என்விஎன். சோமு, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை சேர்ந்த லிங்கைய்யா யாதவ், ரவிஹந்திர வத்திராஜூ, தாமேதர்ராவ், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ரகிம், சிவதாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சந்தோஷ்குமார் ஆகியோர் இந்த வாரம் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து மக்களவை காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகோய் கூறுகையில், ‘எம்பிக்களை இடைநீக்கம் செய்து ஒன்றிய அரசு மிரட்டுகிறது’ என்றார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில், ‘ஒன்றிய அரசு சாமானியர்களின் குரலை கேட்க தயாராக இல்லை’என்று தெரிவித்தார். ஆனால் ஒன்றிய நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில்,‘மக்களவை தலைவரின் பேச்சுக்கு மரியாதை அளிக்காமல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்’என்றார். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கத்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. அங்கும் தொடர்ந்து விவாதத்திற்கு அனுமதி மறுப்பதும், அதனால் தினமும் அமளி நடப்பதும் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் செயல். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்….

The post மக்களின் குரல் appeared first on Dinakaran.

Related Stories: