அண்ணாமலை லண்டன் செல்லும் முன்பாக தமிழக பாஜவுக்கு பொறுப்பு தலைவர் நியமனம்? 11ம் தேதி திருப்பூரில் பாஜ ஆலோசனை கூட்டம்

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலை லண்டன் செல்லும் முன்பாக, பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை வருகிற 11ம் தேதி திருப்பூரில் கூட்டியுள்ளார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக பாஜ தலைவர் அண்ணாமலை அடுத்த மாதம் 28ம் தேதி லண்டன் புறப்பட்டு செல்கிறார். அதற்கு முன்னதாக நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திருப்பூரில் பாஜ மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோருடன் அண்ணாமலையும் பங்கேற்று பேச உள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்கும்படி 66 மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நவம்பர் மாதத்தில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பணிகளை தொடங்குதல் கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ தலைமையில் கூட்டணி அமைக்கும் பணிகளை ஒன்றிணைப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்பதால் 11ம் தேதி நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அதேநேரத்தில் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ளதால் தமிழக பாஜவுக்கு பொறுப்பு தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு அண்ணாமலை லண்டன் செல்வதற்கு முன்பாக வெளியாகலாம் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் தமிழ்நாடு பாஜ தலைவராக அண்ணாமலை பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல் வரை அவரது பதவி நீட்டிக்கப்படுமா? அல்லது புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வியும் பாஜ தரப்பில் எழுப்பப்படுகிறது. ஒரு வேளை அண்ணாமலையின் மாநில தலைவர் பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு தேசிய அளவில் ஏதாவது பதவி வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக தலைவர் பதவியை பிடிக்க பாஜவில் கடும் போட்டி நிலவி வருகிறது.

The post அண்ணாமலை லண்டன் செல்லும் முன்பாக தமிழக பாஜவுக்கு பொறுப்பு தலைவர் நியமனம்? 11ம் தேதி திருப்பூரில் பாஜ ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: