பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

 

பெரம்பலூர்,ஜன.13: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதலைமைச்சரால் 2024ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்க தொகை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வெளியிடப்பட்ட பயனாளிகள் பட்டியலில் இடம் பெறாத நபர்கள் உட்பட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் (சர்க்கரை அட்டைதாரர் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்கள் நீங்கலாக) இன்றும், நாளையும் (13,14 தேதி) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைமுறையிலுள்ள 1,89,816 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசிக்கும் 82 குடும்பங்கள் என மொத்தம் 1,89,898 குடும்பங்களுக்கு 282 நியாயவிலை கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: