பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை பெரம்பலூர் எஸ்பி அலுவலக சூப்பிரெண்டுக்கு கட்டாய ஓய்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் ஆயுதப்படை பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்பி அலுவலக சூப்பிரெண்டுக்கு திருச்சி டிஐஜி கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். கட்டாய ஓய்வு என்பது டிஸ்மிஸ் என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், பெரம்பலூர்  எஸ்பி அலுவலகத்தில் சூப்பிரெண்ட் ஆகப் பணிபுரிந்து வந்த ஹரிஹரன்(54) என்பவருக்கு பிறப்பித்துள்ள உத்தரவுக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வரவேற்பரையில் பணிபுரிந்து வந்த ஆயுதப்படை பெண் போலீஸ் ரத்னா என்பவரை அவரது ஊதியம் தொடர்பாக கடந்த 2021 செப்டம்பர் 2ம் தேதி சம்பளப் பிரிவிற்கு வரச்சொல்லி போன் செய்தும், மேலும் செப். 2, 7 ஆகியத் தேதிகளில் அவரது ஐ.எப்.எச்.ஆர். எம்.எஸ் நெம்பர் கேட்டும், செப்.17ம் தேதி மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் கூட்டுறவு அறையருகே பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்துள்ளீர். இச்செயல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 பிரிவு 20பி(1) படி கண்டிக்கத்தக்க நடத்தை. மேலும் 2021 செப். 18ம் தேதி பெண் போலீஸ் ரத்னாவை பெண் என்றும் பாராமல் அலுவலக நேரத்தில் அலுவலக பணிகள் தொடர்பான வார்த்தைகளில் இருந்து விடுபட்டு, “மேலதிகாரிகளிடம் என்னைப்பற்றி புகார் கொடுத்தாயா” என மிரட்டி பெண் போலீசை மனஉளைச்சலுக்கு ஆளாகக் காரணமாக இருந்தது கண்டிக்கத்தக்கது. அவருக்கு கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக 2021 செப்.24ம் தேதியன்று புகார் கொடுத்து, விசாகா கமிட்டி மூலம் விசாணை செய்யவும், விசாரணையில் உம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட காரணமாயிருந்த ஒழுங்கீனம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி கண்டிக்கத்தக்க நடத்தையாகும். இதன் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட  சி.சி.டபுள்யூ ஏடிஎஸ்பி வாய்மொழி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, வாய்மொழி விசாரணையில் 12 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை செய்து, வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புகார்கள் தொடர்பாக நீங்கள் அளித்த விளக்கமும், பெண் போலீசை பாலியல் ரீதியாக அணுகிய விதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. நீங்கள் இதற்கு முன்னர் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் அலுவலக உதவியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக விசாகா குழு நடத்திய விசாரணையின் முடிவில், உங்களது ஊதிய உயர்வு இரண்டாண்டு காலத்திற்கு ஒத்தி வைத்து ஆணையிடப்பட்டது.இருப்பினும் நடத்தையை மாற்றிக் கொள்ளாமல் பணியிடத்தில் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்து வரும் போக்கானது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. எனவே உங்களுக்கு தண்டனையாக “கட்டாய ஓய்வு” வழங்கி ஆணையிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக் கடிதம் பெரம்பலூர்  எஸ்பி வழியாக, அலுவலக சூப்பிரெண்டென்ட் ஹரிஹரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்டாய ஓய்வு என்பது டிஸ்மிஸ் என்றே காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது….

The post பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை பெரம்பலூர் எஸ்பி அலுவலக சூப்பிரெண்டுக்கு கட்டாய ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: