பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் வரப்பில் பயறு பயிரிடலாம்

சிவகங்கை, செப்.10: நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு வகைகள் பயிரிட வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. சிவகங்கை வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, நெற்பயிரை இலைச் சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், புகையான், பச்சை தத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்கின்றன.

நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் உள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, உளுந்து பயிரிடுவால் இச்செடிகளுக்கு பொறிவண்டுகள் கவர்ந்திழுக்கப்படுகின்றன. அவைகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்பதால், நெற்பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். இதனால் பூச்சிக்கொல்லிகள் உபயோகத்தை குறைக்கலாம். தட்டைப்பயறு அல்லது உளுந்து விதைகளை வரப்பில் 15செ.மீ இடைவெளிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும். இதற்கு தனியாக நீர் பாய்ச்ச தேவையில்லை. நெற்பயிறுக்கு பாய்ச்சும் நீரே போதுமானது. இந்த பயிற்கள் மூலமும் விவசாயிகளுக்கு விளைச்சல் கிடைத்து லாபம் அடையலாம்.

The post பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் வரப்பில் பயறு பயிரிடலாம் appeared first on Dinakaran.

Related Stories: