பீகாரில் இருந்து கூரியர் மூலம் கொள்முதல் செய்து சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 1,600 மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: பீகாரில் இருந்து கூரியர் மூலம் சென்னைக்கு போதை மாத்திரைகளை வரவழைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு விற்பனை செய்து வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ‘போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்களின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப்பொருள் விற்றதாக கடந்த மாதத்தில் மட்டும் 530க்கும் மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகளவில் போதை மாத்திரைகள் நடமாட்டம் இருப்பதாக பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாயிலாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து போலீசார் போதை மாத்திரை விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், சூளைமேடு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக சூளைமேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று மேற்கண்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், சூளைமேடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் எர்வர்ட் பிளிக்ஸ் (25), மவுலிகரண் (26), அஜித் (எ) அஜித்குமார் (22) ஆகியோர் போதை மாத்திரை விற்றது தெரியவந்தது. அவர்களது வீடுகளில் சோதனை நடத்தியபோது, பிரசவ வலிக்கு பயன்படுத்தும் 1,600 மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பீகார் மாநிலத்தில் இருந்து மொத்தமாக ஆன்லைன் மூலம் மாத்திரைகளை ஆர்டர் செய்து, கூரியர் மூலம் வாங்கி சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு மாத்திரை ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post பீகாரில் இருந்து கூரியர் மூலம் கொள்முதல் செய்து சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது: 1,600 மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: