பார்சலில் கறி அதிகமாக இல்லை என பிரபல பிரியாணி கடை சூறை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்; ஆட்டோ டிரைவர் கைது: சிசிடிவி காட்சி வைரல்

சென்னை: பார்சல் பிரியாணியில் அதிகமாக கறி வைக்கவில்லை எனக்கூறி கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். சென்னை பெரியமேடு ஊத்துக்காட்டான் தெருவில் பிரபல பிரியாணி கடை ஒன்று உள்ளது. இங்கு, எப்போதும் கூட்டமாக இருக்கும். திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவர், கடையின் காசாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் ஞயிற்றுக்கிழமை என்பதால் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது, பெரியமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ரபீக் (33), அவரது நண்பர் சலீம் (25), குல்லா (எ) சண்முகம் (34) ஆகியோர் அங்கு வந்து 3 பிரியாணி பார்சல் கேட்டனர்.அதன்படி கடை ஊழியர், 3 பிரியாணி பார்சல் கட்டிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் ரபீக், பார்சலில் கறி கொஞ்சம் அதிகமாக போடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கடையில் இருந்த காசாளர் விக்னேஷ், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரே அளவில்தான் கறி வழங்கப்படுகிறது. கூடுதலாக வழங்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் ரபீக் மற்றும் அவரது நண்பர்களான சலீம் மற்றும் சண்முகம் ஆகியோர், பார்சலை தூக்கி காசாளர் மீது வீசியதுடன், அங்கிருந்த பிரியாணி கரண்டியை எடுத்து, விக்னேஷை கடுமையாக தாக்கிவிட்டு கடையில் இருந்து பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் காயமடைந்த காசாளர் விக்னேஷ் சம்பவம் குறித்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் ரபீகை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சலீம் மற்றும் சண்முகத்தை தேடி வருகின்றனர். கறிக்காக ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் கடையின் காசாளரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

The post பார்சலில் கறி அதிகமாக இல்லை என பிரபல பிரியாணி கடை சூறை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்; ஆட்டோ டிரைவர் கைது: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.

Related Stories: