பாம்பனில் இரவில் போடப்பட்ட தரமற்ற தார்ச்சாலை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

 

ராமேஸ்வரம், பிப்.11:ராமேஸ்வரம் அருகில் பாம்பனில் மாநில நெடுஞ்சாலைத் துறையினால் பல லட்சம் ரூபாய் செலவில் நேற்று முன்தினம் இரவில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பாம்பன் தேசிய நெடுஞ்சாலை முதல் ரயில் நிலையம் வரையிலான தார்ச்சாலை நேற்று முன்தினம் இரவு 11 மணி துவங்கி போடப்பட்டது. காலை விடிவதற்குள் சாலைப் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நேற்று காலையில் வீடுகளில் இருந்து வெளியே வந்த மக்கள் இரவோடு இரவாக போடப்பட்ட தார்ச்சாலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சிறிது நேரத்தில் புதிய சாலையில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் செல்ல துவங்கிய நிலையில் புதிய சாலை காகிதம் போல் பகுதி பகுதியாக கழன்று போனது. பொதுமக்களில் சிலர் கைகளினால் மணல் மீது போடப்பட்டிருந்த தார்ச்சாலையை ரொட்டியை போல் கைகளாலேயே பெயர்த்து எடுத்தனர்.
வழக்கமாக தார்ச்சாலை அமைப்பதற்கு நிலத்தில் செய்ய வேண்டிய எவ்வித அடித்தள வேலைகளும் செய்யாமலும், சேதமடைந்த சாலையில் குவிந்திருந்த மணலை அகற்றாமலும் கருங்கல் சிப்ஸ் மற்றும் தார் கலவையில் மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது.

ஒரே இரவில் போடப்பட்ட தார்ச்சாலை காலையில் பெயர்ந்து போனதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தரம் இல்லாமல் சாலை அமைத்து மக்கள் வரிப்பணத்தை விரையமாக்கிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் குறித்த சாலையை முழுவதும் அகற்றி தரமான சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாம்பனில் இரவில் போடப்பட்ட தரமற்ற தார்ச்சாலை: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: