பாணாவரம் அருகே ஆயல் அரசு பள்ளி வளாகத்தில் 3 மாதமாக தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பரவும் அபாயம்-போர்க்கால நடவடிக்கைக்கு கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள ஆயல் கிராமத்தில், ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி வளாகத்தில் மழைநீர் உள்ளே புகுந்து தேங்கியிருந்தது. இதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உள்ளே செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், செப்டம்பர் 27ம் தேதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகள் சமரசத்தை ஏற்று,  மாணவர்கள் மறியலை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இதுகுறித்து, தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த நாட்களில் மீண்டும் தொடர் கனமழை பெய்ததில், பள்ளி வளாகம் முழுவதும் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக இருப்பதால், மழைநீரில் லார்வா கொசு புழுக்கள் உருவாகி, டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவ விடுப்பில் சென்று, தற்போது மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தை சீரமைக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பாணாவரம் அருகே ஆயல் அரசு பள்ளி வளாகத்தில் 3 மாதமாக தேங்கியுள்ள மழைநீரால் டெங்கு பரவும் அபாயம்-போர்க்கால நடவடிக்கைக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: