பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடைக்குள் புகுந்து மாஜி முதல்வர் அட்டகாசம்: கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு

போபால்: பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் மதுக்கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள் மீது கற்களை வீசி மாஜி முதல்வர் உமாபாரதி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் புதிய கலால் கொள்கையை  மாநில அரசு வெளியிட்டது. அதன்படி ஹோம் பார்கள் அமைக்க அனுமதிக்கபடுகிறது மற்றும்  மதுபானங்களின் சில்லறை விலையை 20 சதவீதம் குறைத்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வரும், ஒன்றிய அமைச்சருமான உமா பாரதி, மத்தியப் பிரதேசத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இவர் நேற்று மாலை தலைநகர் போபாலின் ஆசாத் நகர் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்து, அங்கிருந்த அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் மீது கற்களை வீசினார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் உடைந்து கீழே விழுந்தன. கடையின் விற்பனையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோவை உமா பாரதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. தொடர்ந்து மற்றொரு டுவிட்டர் பதிவில், ‘பர்கேடா பதானி பகுதியில் உள்ள தொழிலாளர்களின் காலனியில் ஏராளமான மதுபானக் கடைகள் உள்ளன. அங்கு திறந்தவெளியில் மதுபானம் சப்ளை நடக்கிறது. இந்த கடைகளில் மதுபானங்களை வாங்கிக் குடிக்கும் கூலித்தொழிலாளர்களின் பணம் வீணாகிறது. விதிமுறைக்கு எதிராக இந்த மதுபானக்கடைகள் செயல்படுவதால், அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் கடையை மூடுவதாக உறுதியளித்தது. ஆனால் கடையை மூடவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அந்த கடையை மாவட்ட நிர்வாகம் மூட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்’ என்று எச்சரித்துள்ளார். ஆளும் பாஜக அரசுக்கு எதிராக அம்மாநில முன்னாள் முதல்வர் மதுபானக் கடையில் கற்களை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post பாஜக ஆளும் மாநிலத்தில் மதுக்கடைக்குள் புகுந்து மாஜி முதல்வர் அட்டகாசம்: கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: