பாஜக அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்

திருவண்ணாமலை, பிப்.24: பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அனைத்து தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் இழக்கும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவண்ணாமலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மறைந்த பலராமன் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு, பலராமன் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: விவசாயிகளுக்கு ஏற்கனவே மோடி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால், விவசாயிகளின் நியாத்தை ஏற்றுக்கொள்ளாமல், பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடூரமான ஆட்சியை நடத்துகிறது. சாலையில் குழிதோண்டுவது, முள் கம்பிகளையும் ஆணிகளையும் சாலையில் நடுவது என இந்த அரசாங்கம் தீவிரவாதிகளை போல மாறியிருக்கிறது. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு விவசாயிகள் இறந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குண்டு காயங்கள் அடைந்துள்ளனர். பலர் பார்வை இழந்துள்ளனர். மோடி அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ேபாராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு மீண்டும் பிரதமர் மோடி வருவதன் மூலம் என்ன சாதிக்க போகிறார். தமிழ்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசு ₹37 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டது. நிர்மலாசீதாராமன், ராஜ்நாத்சிங், மத்திய நிபுணர் குழுவெல்லாம் வந்தது. ஆனால், ஒரு பைசா கூட தரமாட்டேன் என அடம்பிடிக்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஏன் வர வேண்டும். தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற தகுதியில்லாத பிரமதர் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டுக்கு வந்து அண்ணாமலையை தூக்கிப்பிடிப்பதால், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிடுமா. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்கமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ராமர் கோயில் எங்கே இருக்கிறது. இங்கிருக்கிற முருகரை பற்றியோ, பிள்ளையாரை பற்றியோ பேசாமல், எங்கேயோ இருக்கிற ராமரை பற்றி பேசினால், தமிழ்நாட்டு மக்கள் பலியாக மாட்டார்கள். நடைபெற உள்ள தேர்தலில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பது உறுதி. தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையை பாராட்டுகிறோம். 12 மசோதாக்களை நிறைவேற்றி உள்ளனர். குறிப்பாக, எஸ்சி, எஸ்டி மக்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி நிதி ஒதுக்குவதற்கான எஸ்சி எஸ்டி உட்கூறு திட்டம் சட்டத்தை முதல்வர் நிறைவேற்றியுள்ளதை வரவேற்கிறோம். நன்றி தெரிவிக்கிறோம். இந்த உட்கூறு திட்டம் சட்டத்தை ஏற்கனவே மோடி அரசு நீர்த்துப்போக செய்தது.

சிப்காட் அமைப்பது தொடர்பான பிரச்னையில், விவசாயிகளும் அரசும் சுமூகமாக பேசித்தான் தீர்வுக்கு வர வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை எடுக்காமல், அரசு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளின் ஒப்புதலோடுதான் எடுக்க வேண்டும். பாஜவுக்கு சொந்த பலம் இருக்கிறது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். கதவு ஜன்னல் திறக்கிறது கூட்டணிக்கு வர வேண்டும் என்றெல்லாம் பேசுவது நியாயமற்றது. பாஜக எடுத்த எல்லா நடவடிக்கைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழக்கிற பல நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவாக சென்றது. ஆனால், இந்த தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றே கருதுகிறேன். அதையும் மீறி கூட்டணிக்கு போனால், அதிமுகவை ஒரு அரசியல் கட்சி என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் வீரபத்திரன், மாநில குழு உறுப்பினர் பாண்டி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post பாஜக அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் appeared first on Dinakaran.

Related Stories: