பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது

நாமக்கல், ஆக.26: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் டவுன் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிய படி பயணம் செய்கிறார்கள். இதை தடுக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, போக்குவரத்து துறையினருக்கு மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் அறிவுரை படி, காளப்பநாய்க்கன்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார். இதில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ேபசுகையில், ‘பள்ளிக்கு வரும் மாணவர்கள், பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு வரக்கூடாது.

இதுபற்றி அரசு டவுன் பஸ் கண்டக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளியில் படிக்கும் போதே பின்பற்ற வேண்டும். லைசென்சு இல்லாமல் ஸ்கூட்டர், பைக் போன்றவற்றை மாணவர்கள் ஓட்டக்கூடாது. அப்படி செய்தால் மாணவர்களின் பெற்றோர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குபதிவு செய்ய முடியும். எனவே, பெற்றோர்களுக்கு மாணவர்கள் பிரச்னையை ஏற்படுத்தக் கூடாது. அதேபோல பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை லைசென்சு எடுக்கும் முன் டூவீலர்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது,’ என்றார். மேலும், சாலை விபத்துகள் எப்படி ஏற்படுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த படக்காட்சி மாணவர்களுக்கு எல்இடி திரை மூலம் போட்டு காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

The post பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்யக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: