சேந்தமங்கலம், ஜூன் 29: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் ஊராட்சி மலைப்பாறை பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கராசு(52). இவர் தனது தோட்டத்தில் ஆடு -மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், ஆடுகளை தோட்டத்தில் மேச்சலுக்காக விட்டு விட்டு, விவசாய பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வெறி நாய்கள், திடீரென ஆடுகளை துரத்தி துரத்தி கடித்துக் குதறின. இதில், 3 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தன. மேலும், 5 ஆடுகள் காயமடைந்தன. அந்த ஆடுகளை தங்கராசு மீட்டு, நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். எருமப்பட்டி வட்டாரத்தில் கடந்த சில நாட்களில் மட்டும், விவசாய தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை குறிவைத்து வெறிநாய்கள் கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது. வெறி நாய்களின் அட்டகாசத்திற்கு, இதுவரை 12 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், ஆடு -மாடுகளை கடித்து குதறி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, தெருக்களில் சுற்றித்தெரியும் நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post எருமப்பட்டி வட்டாரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறி 12 ஆடுகள் பலி விவசாயிகள் பீதி appeared first on Dinakaran.