பறக்கும் அபாயம்

ஜம்முவில் இந்திய விமானப்படை தளம் மீது டிரோன் மூலம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் நுழையும் முன்பே டிரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக, தீவிரவாதிகளின் பல்வேறு தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே நமது வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். ஆனால், டிரோன் மூலம் நடந்திருக்கும் தாக்குதல் சம்பவம் கூடுதல் அக்கறையுடன் சிந்திக்க வேண்டிய விஷயம்.இந்தியாவில் விசேஷ நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.  டிரோன்களை விற்பனை செய்வதிலும், பயன்படுத்துவதிலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நேரமிது. முக்கியமாக, புதிய தொழில்நுட்ப வசதியுடன் உள்ள டிரோன்கள் தனி நபர்களிடம் இருப்பது நல்லதல்ல. விமானப்படை தளம் என்பதால் எந்நேரமும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் இருந்ததால், குண்டுகளுடன் நுழைந்த டிரோன் பறந்து ஓடியது. மற்ற இடங்களில் என்றால் யோசித்தே பார்க்க முடியவில்லை.இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை. விமான சேவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு அதிரடியாக விதிக்கப்பட்டன. தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, சிறிய தாக்குதல் முயற்சிகளையும் கூட உன்னிப்பாக கண்காணித்து, சிக்கல்களை தீர்த்து விடுகின்றனர். பாதுகாப்பு விஷயத்தில் அவர்கள் ஒருபோதும் அலட்சியமாக இருப்பதில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன்பே யோசித்து தடை விதிப்பது தான் நல்லது. இதில் தாமதம் கூடாது. நாடு முழுவதும் எத்தனை டிரோன்கள் உள்ளன. டிரோன் வைத்துள்ளவர்களின் விவரங்கள் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். இதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதை கணக்கெடுக்க பல மாதங்கள் கூட ஆகலாம். இந்தியாவில் ஆன்லைனில் அதிநவீன டிரோன் வாங்கியுள்ளவர்களின் விவரங்களை முதலில் சேகரிக்கும் முயற்சியில் உளவு அமைப்புகள் ஈடுபட வேண்டும். விவசாயம், கிருமிநாசினி தெளிப்பு, காடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தலால் விழாக்கள் நடைபெறாமல் உள்ளது. இல்லாவிட்டால், நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களில் மக்களின் கூட்டம் அலைமோதும். பொது இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது டிரோன் மூலம் முக்கிய இடங்களை படம் பிடிப்பது தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது பாதுகாப்பை கேள்விகுறியாக்கி விடும். பாதுகாப்பு விஷயத்தில் துளியளவு கூட சிக்கல் இருக்கக்கூடாது. ஜம்முவில் டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டாலும், இவ்விஷயத்தில் தொடர்ந்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் டிரோன்களை வைத்திருப்பது, இயக்குவது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிடலாம்….

The post பறக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: