பத்திரப்பதிவு ஊழியர் வீட்டில் ரூ.7.30 லட்சம் பறிமுதல்; மனைவி பெயரில் பல கோடி ரூபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்தது அம்பலம்: அதிமுக முக்கிய புள்ளிகளின் பினாமியா? என விசாரணை

சேலம்: சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் காவேரி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் 200 சதவீதத்திற்கு மேல் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 5 நாட்களுக்கு முன்பு, சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், இரும்பாலை அருகேயுள்ள கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.7.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.அதே நேரத்தில் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதும் தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து மட்டும் 30க்கும் மேற்பட்ட சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் சிக்கியது. இவை மட்டும் பல கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும். மேலும் 36 பவுன் நகை இருந்தது. இந்த நகை குடும்பத்தினரின் பயன்பாட்டில் இருப்பதால் அவை பறிமுதல் செய்யப்படவில்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எப்படி சம்பாதிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.இவர், பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து வருவதால் யாராவது நிலத்தை விற்பனை செய்ய வந்தால், உடனடியாக அதிமுக பிரமுகர்களுக்கு தகவல் தெரிவிப்பார். விற்பனை செய்யும் விலையை விட கூடுதலாக பணம் தருவதாக கூறி அதிமுகவினருக்கு நிலத்தை விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசு வேலையில் இருந்து கொண்டே, அவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அதே நேரத்தில் அவர் அதிமுக முக்கிய புள்ளிகளின் பினாமியாக இருந்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. சேலத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு இவர்தான் எல்லாமுமாக இருந்துள்ளார். தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்து பத்திரங்களை வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அரசு ஊழியரான காவேரி, ரியல் எஸ்டேட்  தொழிலையும் ரகசியமாக செய்து வந்துள்ளார். அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். தொடர்ந்து விரிவான விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்….

The post பத்திரப்பதிவு ஊழியர் வீட்டில் ரூ.7.30 லட்சம் பறிமுதல்; மனைவி பெயரில் பல கோடி ரூபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்தது அம்பலம்: அதிமுக முக்கிய புள்ளிகளின் பினாமியா? என விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: