நடுத்தரவாசிகள் விரும்பி வாங்குவதால் செகண்ட் சேல்ஸ் கார் விற்பனை 30% அதிகரிப்பு

சேலம்: நடுத்தரவாசிகள் செகண்ட் சேல்ஸ் கார்களை விரும்பி வாங்குவதால் கார்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் ஓடுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது. புது கார் வாங்குபவர்கள் அந்த காரை ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டும் ஓட்டுகின்றனர். பின்னர் விற்றுவிட்டு புதிய கார் வாங்குகின்றனர். இதுபோன்ற செகண்ட் சேல்ஸ் காரை வாங்க தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். கார் எந்த ஆண்டு வாங்கப்பட்டது? எத்தனை ஆண்டுகள் ஓடியுள்ளது? இன்ஜின் தரம் உள்ளிட்டவைகளை பரிசோதித்து, உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து வாங்கிக்கொள்கின்றனர்.அந்த காரை செகண்ட் உரிமையாளர்கள் வாங்கி பழுது பார்த்து, பின்னர் அவர்கள் இடத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றனர். அந்த வகையில், சேலத்தில் அண்ணா பூங்கா பின்புறம், 4 ரோடு, 5 ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், வின்சென்ட், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செகண்ட் கார் விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் பதிவு எண் உள்ள கார்களை விற்பனை வைத்துள்ளனர். இவர்களிடம் நடுத்தரவாசிகள் அதிகளவில் செகண்ட் கார்களை வாங்கி வருகின்றனர். இதனால் செகண்ட் கார் விற்பனை அதிகரித்துள்ள விற்பனையாளர்கள் ெதரிவித்தனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த செகண்ட் சேல்ஸ் கார் விற்பனையாளர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செகண்ட் சேல்ஸ் கார்கள் விற்பனைக்கு உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு செகண்ட் சேல்ஸ் கார் விற்பனை நல்லமுறையில் இருந்தது. 2020 மற்றும் 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனாவால் செகண்ட் சேல்ஸ் கார்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்தது. அதிலும் குறிப்பாக கடந்த இரு ஆண்டுகளிலும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நூறு சதவீதம் விற்பனை குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது வருவாயும் ஓரளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி உள்பட 4 பேர் இருந்தால், அவர்கள் ஒரே பைக்கில் செல்லமுடியவில்லை. கார் வாங்கினால் குடும்பத்தோடு வெளியில் செல்லலாம் என்று திட்டமிடுகின்றனர். அவர்களில் ஒரு சிலர் புது கார்களை வாங்குகின்றனர். பலர் செகண்ட் சேல்ஸ் காரை தேர்வு செய்கின்றனர். தற்போது இருசக்கர வாகனம் குறைந்தபட்சம் ரூ75 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ2 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே இந்த விலைக்கு செகண்ட் சேல்ஸ் கார் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கின்றனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக இது போன்ற கார்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. எங்களிடம் கார் எந்த கம்பெனி?  எந்த ஆண்டு வாங்கப்பட்டது? என்பது போன்ற தரத்தை பொறுத்து ரூ1.50 லட்சம் முதல் ரூ10 லட்சம் வரை விற்பனை செய்கிறோம். இவ்வாறு  விற்பனையாளர்கள் கூறினர்….

The post நடுத்தரவாசிகள் விரும்பி வாங்குவதால் செகண்ட் சேல்ஸ் கார் விற்பனை 30% அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: