திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு, அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.மேலும், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, கடந்த ஜூலை 29ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான புல எண் 132ல் அடங்கிய பரப்பளவு 4 ஏக்கர் நிலம் நீண்ட காலமாக கோயில் குத்தகை நிலங்கள் பட்டியலில் இடம் பெறாமல் கவனிப்பாரற்று கிடந்தது தெரிந்தது. மேலும், இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்யும் தகவலும் கோயில் நிர்வாகத்துக்கு கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தபோது ஆரம்பத்தில் இருந்தே இந்த நிலம் கோயில் பெயரில் பட்டா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த நிலத்தை கோயில் வசம் கையகப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலையில் நேற்று, மேற்கண்ட பகுதியில் நிலம் அளவீடு செய்து, 4 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினர். பின்னர், கோயில் நிர்வாகத்தின் பெயர் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.20 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது….

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: