திருப்புத்தூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி ஆய்வு

திருப்புத்தூர், ஜூன் 5: திருப்புத்தூரில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருவது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிர்வாகிகளுடன் ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தினார். திருப்புத்தூரில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருவது குறித்து நேற்று நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த் முன்னிலை வகித்தனர். திருப்புத்தூர் நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்பி கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.

திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டார, நகர பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருவது குறித்து ஆய்வு மற்றும் ஆலோசனை நடத்தினார்கள். இதில் ப.சிதம்பரம் பேசுகையில், ஜூன் மாதத்திற்குள் பூத் கமிட்டி பணிகளை நிறைவு செய்ய வேண்டும். கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் எனவும், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் நடைபெறும் போது கட்சியின் சார்பில் 18 வயது நிரம்பிய இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில், காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, முன்னாள் எம்எல்ஏ சுப்புராம், பூலாங்குறிச்சி வட்டார செயலாளர் சேதுராமன், மனித உரிமை மாவட்ட செயலாளர் சரவணபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்ட கமிட்டி உறுப்பினர் பூவாலை நன்றி கூறினர்.

The post திருப்புத்தூரில் காங்கிரஸ் பூத் கமிட்டி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: