திருக்கழுக்குன்றம் அருகே குறுகலாக கட்டப்பட்ட பாலத்தால் மக்கள் அவதி

 

திருக்கழுக்குன்றம், ஜூலை 8:திருக்கழுக்குன்றம் அருகே குறுகலாக கட்டப்பட்ட பாலத்தால் அவதிக்குள்ளான மக்கள் அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், அமிஞ்சிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வீராபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெரு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நெடுஞ்சாலையிலிருந்து தெருவுக்குள் நுழையும் முகப்பு பகுதியில் ஏற்கனவே ஒரு பழமையான சிறிய பாலம் இருந்தது.

அது மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அந்தப் பாலத்திற்கு பதிலாக அதே பகுதியில் வடிகால்வாயுடன் கூடிய ஒரு புதிய பாலம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு 15வது நிதிக்குழு மானியத்தின் மூலம் பாலம் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட பாலம் ஏற்கனவே இருந்த பாலத்தின் அளவை விட மிகவும் அகலம் குறுகியதாகவும், அதிக உயரத்துடனும் கட்டப்பட்டுள்ளதால் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் தெருவினுள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பைக்குகள் மட்டும் தடுமாறி செல்லும் அளவுக்கு பாலம் உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்சோ, தீயணைப்பு வாகனமோ கூட செல்ல முடியாத நிலையில் உள்ள அந்த பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக நேரில் பார்வையிட்டு ஏற்கனவே இருந்த அகலப்படி மாற்றியமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருக்கழுக்குன்றம் அருகே குறுகலாக கட்டப்பட்ட பாலத்தால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: