தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் தலைமை செயலர், மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் கொரோனா தடுப்பு முறைகளை தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போதுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. சில ஊர்களில் பள்ளி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. தேர்தல் பரப்புரையின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள அதே வேளையில் கொரோனா பரவலும் கடந்த ஒரு வாரமாக அதிகரிக்க தொடங்கி இருப்பது தமிழகத்தில் பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை பொறுத்தவரை அதனுடைய தடுப்பு நடவடிக்கைளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தினுடைய தற்போதைய நிலை என்ன என்ற விவரங்களை தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் கேட்டறிவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. நேற்று மட்டும் 64,000 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு பிறகு 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரை தற்போது தேர்தல் காலம் என்பதால் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தான் தற்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருக்கிறார்கள். ஒரே நேரத்தில் தேர்தல் பணிகளையும், கொரோனா தடுப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

பொதுமுடக்கத்தை பொறுத்தவரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பொதுமுடக்க உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தளர்வுகள் காரணமாக தான் கொரோனா பரவல் 2வது அலை என்பது இருந்து வருகிறது. தேர்தல் நடைபெற உள்ளதால் பொதுமுடக்கம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் மிக மிக குறைவு. இரவு நேரங்களில் பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிக குறைவாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Related Stories: