ஹாக்கி இந்தியா அறிவிப்பு : மன்பிரீத், தரம்வீர் சிங், சவீதா அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

புதுடெல்லி: இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த மன்பிரீத் சிங், தரம்வீர் சிங் மற்றும் மகளிர் அணி கோல் கீப்பர் சவீதா ஆகியோரின் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு ஹாக்கி இந்தியா பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்தாண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு ஒவ்வொரு விளையாட்டு துறையும் வீரர்களின் பெயர்களை பரிந்துரைத்து வருகிறது. அந்த வகையில், ஹாக்கி இந்தியா சார்பில் மன்பிரீத் சிங், தரம்வீர் சிங், சவீதா ஆகியோரின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் செயல்பட்டார்.  இவரது தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு உலக லீக் பைனலில் வெண்கலம் வென்றது.நடுகள வீரரான தரம்வீர் சிங் 2014ல் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். இந்திய மகளிர் அணியின் கோல் கீப்பர் சவீதா. கடந்த ஆண்டு நமது மகளிர் அணி முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போது, எதிரணியின் பல்வேறு கோல் முயற்சியை தடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் சவீதா.  இவர்களைத்தவிர, பயிற்சியாளர் பிஎஸ். சவுகான் துரோணாச்சார்யா விருதுக்கும், சாங்காய் இபெம்ஹல் சானு, பாரத் சேத்ரி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளருக்கு வழங்கப்படும் தயான்சந்த் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: