தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு.!

சென்னை: தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாக வரவேற்றனர். கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 1ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று ‘பிலவ‘ ஆண்டு விடைபெற்று ‘சுபகிருது‘ புத்தாண்டு பிறந்துள்ளது. மாவட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக அதிகாலை முதலே பொதுமக்கள், கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். இயற்கை சார்ந்து கொண்டாடும் சித்திரை திருநாள், தமிழ்  வருடத்தின் புதிய தொடக்கமாக கருதி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்நாளில் வீடுகளை அலங்கரித்து, கோயில்களுக்கு சென்றும், குடும்பமாக  வழிபட்டும் எளிமையான விழாவாகவே சித்திரை திருநாள் அமைகிறது. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு உள்ளிட்ட அறுசுவை உணவுகளை  படைத்தும், கனிகளை வைத்தும் மக்கள் வீடுகளில் வழிபடுகிறார்கள். அதன்படி, மா இலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து வீடுகளில் இனிப்பு உள்ளிட்ட பதார்த்தங்களை செய்து குழந்தைகளும், பெரியவர்களும் புத்தாண்டை வரவேற்றனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொங்கல் பண்டிகையை போன்று  விமர்சையாக கொண்டாடப்படும் இந்த தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள  தமிழர்கள் போற்றும் வகையில் சிறப்பித்து வருகின்றனர். இந்த நன்னாளில்  அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தமிழ் புத்தாண்டு நல்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அனைவரின் வாழ்விலும் இன்பம் பெருக வேண்டி  ஒருவருக்கொருவர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வாழ்த்துகளை  பரிமாறினர். இதேபோல், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இன்று தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.காஞ்சி, செங்கல்பட்டு திருவள்ளூரில் கோலாகலம்தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனம் நடந்தது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், ஏகாம்பரநாதர், கைலாசநாதர் கோயில், அஷ்டபுஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் உள்ளிட்ட 196 கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. திருமஞ்சனம், சந்தனகாப்பும் நடந்தது. அதிகாலையிலே குளித்து புத்தாடை உடுத்தி நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பல கோயில்களில் அன்னதானம், பிரசாரம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உள்ள பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திருக்கச்சூர் ஈஸ்வரன் கோயில், புளிப்பாக்கம் ஈஸ்வரன் கோயில், செங்கல்பட்டு ஈஸ்வரன் கோயில், வேதாந்ததேசிக பெருமாள் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள சக்தி விநாயகர் கோயில், செங்கல்பட்டு குழுந்தியம்மன் கோயில், மறைமலைநகர் முருகன் கோயில், நாகாத்தமன் கோயில், செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில், அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், திருப்போரூர் கந்தசாமி கோயில் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அச்சிறுப்பாக்கம் மழைமலை மாதா, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மாதா கோயில், மறைமலைநகர், கல்பாக்கம், கோவளம், செய்யூர் ஆகிய இடங்களில் உள்ள மாதா கோயில்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தீட்சீஸ்வரர் கோயில், ஜெயா நகர் வல்லப விநாயகர் கோயில், பூங்கா நகர் சிவ விஷ்ணு கோயில், காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், சிறுவாபுரி முருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம், திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயம், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்….

The post தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு.! appeared first on Dinakaran.

Related Stories: