பெரம்பூர், ஆக.14: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் – ஜோதிலட்சுமி தம்பதியின் மகள் காவியா (6), கடந்த சனிக்கிழமை, வீட்டின் அருகே உள்ள பெட்டி கடையில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்த சிறிது நேரத்தில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மூக்கிலும் வாயிலும் நுரை தள்ளி மயங்கியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்து குளிர்பான மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகள் மற்றும் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை சோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
மேலும், காலாவதியான குளர்பானங்கள் விற்கப்பட்டால் கடையின் உரிமையாளர் மீதும், அதை தயாரிப்பவர் மீதும் மீதும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் இந்த ஆய்வில் ஈடுபட வேண்டும், என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால்வேனா உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர். குறிப்பாக, பெரம்பூர், புழல் முருகேசன் தெருவில் உள்ள, செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கங்கை ரஸ்னா என்ற குளிர்பான கம்பெனியில் ஆய்வு செய்தனர். இவர்கள் தனியாக ஒரு வீடு எடுத்து, அதில் குளிர்பானம் தயாரித்து பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
மேலும், இங்கு தயாரிக்கப்படும் எந்த ஒரு குளிர்பானத்திலும் தயாரிக்கும் தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை. மேலும், பாத்ரூம் பைப்பில் இருந்து நேரடியாக குளிர்பானம் தயாரிக்கும் இடத்திற்கு தண்ணீர் வசதி செய்து தரப்பட்டு அதில் இந்த குளிர்பானங்கள் தரமற்ற முறையில் தயார் செய்வது தெரிய வந்தது. பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல் பொருட்களை போட்டு வைத்திருந்ததும் தெரிந்தது.
இதனால், அந்த குளிர்பான கம்பெனியை சீல் வைத்தனர். முன்னதாக, அங்கிருந்து குளிர்பானங்கள் மற்றும் அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உள்ளிட்டவை மாதிரிகள் எடுக்கப்பட்டு, ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் 15 நாட்களுக்குள் தெரியவரும். அதன்பிறகு நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறுகையில், ‘‘சென்னை முழுவதும் 10 ரூபாய் குளிர்பானங்கள் எங்கு தயாரிக்கப்படுகிறது, என்பதை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். பெரம்பூரில் நடத்திய சோதனையில், சுகாதாரமற்ற முறையில் 10 ரூபாய் குளிர்பானங்கள் தயாரித்து விற்ற நிறுவனத்தை மூடியுள்ளோம். இங்கிருந்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து சென்னை முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.
The post சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை ரூ.10 குளிர்பான நிறுவனத்திற்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை appeared first on Dinakaran.