தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.102ஐ தாண்டிய நிலையில் டீசல் விலை ரூ.100ஐ நெருங்குகிறது: கார், கனரக வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி

சேலம்: தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.102ஐ தாண்டிய நிலையில், டீசல் விலை ரூ.100ஐ நெருங்குகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டீசல் விலையேற்றத்தால் கார், கனரக வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் பெட்ரோல், டீசலின் விலை மள, மளவென உயர்ந்து வருகிறது. நாள்தோறும் விலை உயர்த்தப்பட்ட நிலையில் கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் விலை ரூ.100ஐயும், டீசல் விலை ரூ.94ஐயும் தாண்டி அதிர்ச்சி கொடுத்தது. நேற்று நாட்டில் மிக அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.115.40க்கும், டீசல் ரூ.105.98க்கும் விற்கப்பட்டது. தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.102ஐ தாண்டியுள்ளது. அதிகபட்சமாக கடலூரில் ரூ.103.08 ஆக இருக்கிறது. இந்நிலையில் நேற்று, பெட்ரோல் 26 காசும், டீசல் 34 காசும் அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையில் நேற்று முன்தினம் ரூ.100.75க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், நேற்று ரூ.101.01 ஆகவும், ரூ.96.26க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல், ரூ.96.60 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலையை விட, 10 காசு முதல் 20 காசு வரை டீசல் விலை கூடுதலாக உயர்ந்து வருகிறது. இதனால், டீசல் விலையும் ரூ.100ஐ நெருங்கியுள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாகை, ராமநாதபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில், டீசல் விலை ரூ.98ஐ கடந்து விட்டது. அதிகபட்சமாக கடலூரில் ஒரு லிட்டர் டீசல் ரூ.98.62க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தவிர, 25 மாவட்டங்களில் டீசல் விலை ரூ.97க்கும் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் குறைந்தபட்சமாக சென்னையில் ரூ.96.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இன்னும் ஓரிருநாளில் பெரும்பாலான மாவட்டங்களில், டீசல் விலை 100 ரூபாயை தாண்டிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால், கார் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு, சுங்க கட்டண வசூல் உயர்வு என லாரி தொழில் தடுமாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது டீசல் விலை உயர்வும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடகையை உயர்த்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை உயர்வின் காரணமாக, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், குடும்பம் நடத்த முடியாத சூழலுக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், எரிபொருள் விலையை குறைக்க ஒன்றிய பாஜ அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களுக்கு வேதனையை அளித்துள்ளது. தற்போது டீசல் விலை உயர்வின் காரணமாக, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதால், குடும்பம் நடத்த முடியாத சூழலுக்கு ஏழை, நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்….

The post தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.102ஐ தாண்டிய நிலையில் டீசல் விலை ரூ.100ஐ நெருங்குகிறது: கார், கனரக வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: