தடை வலை மீன்பிடிப்பால் நாட்டு படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: பறிமுதல் படகை மீட்க வேண்டும்

தொண்டி: தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் நாட்டு படகு மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை படிக்க வைக்க கூட முடியாமல் தவித்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். கடல் தொழில் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ளது. உணவுக்காக கடல் மீன்களை கரை ஓரங்களில் பிடித்த மனிதன் கால போக்கில் மரம், கட்டை உள்ளிட்டவைகளின் உதவியுடன் சற்று ஆழத்திற்கு சென்றான். நாகரீக வளர்ச்சி காரணமாக படகு, கப்பல் மூலம் கடல் கடந்து வணிகத்திலும் ஈடுபட்டான்.பண்டைய வரலாற்று நூல்களில் தமிழன் பல்வேறு நாடுகளுடன் கடல் வழி வணிக தொடர்பு வைத்ததற்கான ஆதாரங்கள் அதிகம் உண்டு. உள்ளுரில் உணவிற்காக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. முற்றிலும் கடல் பகுதியான இங்கு துறைமுகம் அமைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரங்காடு, முள்ளிமுனை, சோலியக்குடி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் உள்ளது. நீண்ட தூரம் சென்று மீன் பிடிக்க முடியாததால் பெரும்பாலும் கரை ஓரங்களில் மட்டுமே மீன் பிடிப்பார்கள். இதனால் போதிய வருமானம் இல்லாமல் வாழ்வை நகர்த்தி வருகின்றனர்.விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி, அரிப்பு வலை, சுருக்கு மடி உள்ளிட்ட முறைகள் மூலம் மீன் பிடிக்கப்படுவதால் மீன் குஞ்சுகள் முதல் பிடித்து விடுகின்றனர். இதனால் கரை ஒரங்களில் மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. விசை படகு மீனவர்களுக்கு திங்கள், புதன், சனிகிழமையும் நாட்டு படகு மீனவர்களுக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளிலும் மீன் பிடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் பிரச்னை ஏற்படுத்தும் விதமாக காரைக்கால் மற்றும் நாகபட்டினம் விசைபடகு மீனவர்கள் வாரத்தின் 7 நாளும் மீன் பிடிக்க வருகின்றனர். இதனால் நாட்டு படகு மீனவர்கள் மீன்பாடு எதுவும் இல்லாமல் நஷ்டத்துடன் திரும்பி வருகின்றனர். கந்து வட்டி காரர்களிடம் அதிக வட்டிக்கு கடனை வாங்கி போதிய வருமானம் இல்லாமல் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் எத்தனையே மீனவர்கள் கஷ்டப்படுகின்றனர். சிலர் கடனை அடைக்க தங்கள் குழந்தைகளையும் கடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பும் பாதியில் நின்று விடுகிறது. இடைநிறுத்திய மாணவர்கள் இங்கு ஏராளம் என்பது குறிப்பிடதக்கது. சிறு வயதிலையே தொழிக்கு செல்வதால் விரைவில் போதைக்கும் அடிமையாகி விடுகின்றனர்.நாட்டு படகு மீனவர்கள் சற்று தொலைவிற்கு சென்றாலும் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகின்றனர். மீன்வர்கள் கைது விலை உயர்ந்த படகு மற்றும் வலைகளை பறித்துக் கொள்வது என அட்டூழியம் தொடர்கிறது. கடந்த காலங்களில் தமிழக படகுகள் 200க்கும் மேல் பறிமுதல் செய்துள்ளனர். இதில் நம்புதாளை படகு மட்டும் 9. இதில் மூன்று படகை இலங்கை அரசு விடுவித்தும் இன்றும் நாடு வந்து சேரவில்லை. இலங்கை அரசின் அட்டூ லியம் நாட்டு படகு மீனவர்கள் வாழ்வில் பெரும் நஷ்டத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து நாட்டுப் படகு மீனவர் சங்க தலைவர் ஆறுமுகம் கூறியது: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். நாங்கள் எங்கள் வாழ்விற்க்காக கடலுக்கு செல்கிறோம். உயிரை பணயம் வைத்து இரவு நேரத்தில் எந்த வெளிச்சமும் இல்லாமல் வலையை விரித்து வைத்து காத்திருப்போம். சில நேரம் நல்ல பாடு வரும் சில நாள் டீசலுக்கு கூட வழி இருக்காது. பைபர் படகு மற்றும் வல்லம் மூலம் செல்வதால் அதிக தூரம் செல்ல முடியாது கிடைப்பதை வைத்து வாழ்வை நகர்த்துகிறோம். இலங்கை கடற்படையினர் வசம் உள்ள எங்களின் படகுகளை மீட்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.அழியும் மீன் வளம்தொண்டி ஆனந்தன் கூறியது: இரட்டைமடி, சுறுக்குமடி மூலம் மீன்பிடிப்பதால் மீன் வளம் முற்றிலும் அழிந்து வருகிறது. உதாரணமாக வாளை மீன் கடந்த காலங்களில் டன் கணக்கில் வலையில் சிக்கும். தற்போது ஒன்று கூட சிக்குவது கிடையாது. இதனால் வாளை மீன் இனம் அழிந்து வருகிறதா என்று சந்தேகமாக உள்ளது. இவ்வாறு குஞ்சு மீன் முதல் பிடித்துச் சென்றால் எவ்வாறு நாட்டு படகு மீனவர்கள் வாழ்வு வளம் பெரும். கடுமையான சட்டங்கள் மூலம் மீன்பிடி முறையை ஒழுங்கு படுத்தி நாட்டு படகு மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்றார்….

The post தடை வலை மீன்பிடிப்பால் நாட்டு படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: பறிமுதல் படகை மீட்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: