தஞ்சாவூரில் மழையால் சாலையில் கொட்டி வைத்த நெல்மணிகள் நனைந்து சேதம்

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக மழை இன்றி காணப்பட்டது. மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை நிலையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கு பரவலாக மழை பெய்து பெய்தது. நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மி.மீ): தஞ்சை 14, வல்லம் குருங்குளம் தலா 1, பூதலூர் 90, திருக்காட்டுப்பள்ளி 64, கல்லணை 14 ,வெட்டிக்காடு 3, கும்பகோணம் 12, பாபநாசம் 2, அய்யம்பேட்டை 3, திருவிடைமருதூர் 19, மஞ்சலாறு 15 ,அணைக்கரை 36, பேராவூரணி 2 .இவ்வாறு மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் இம்மழை அறுவடைக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல் ஏற்கனவே ஈரப்பதத்தில் இருப்பதால் காய வைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் தற்போதைய மழையில் மேலும் நெல் ஈரமாகியுள்ளதால் கவலை அடைந்துள்ளனர். தஞ்சை அருகே 8 கரம்பை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல் மணிகள் சாலையில் காயவைத்தபோது மழையில் நனைந்து சேதமடைந்தது. தற்போது குறுவை நெல் ஈரபதம் 17 சதவீதத்திற்கு உள்ளேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி அனைத்து நெல்லையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஏற்கனவே பத்து நாட்களாக மழை பெய்ததால் ஈரப்பத அளவு உயர்ந்து இருந்தது. இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை வரும் 16ம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ள நிலையில் இதை கருத்தில் கொண்டு உடனடியாக ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி அனைத்து நெல்லையும் ஓரிரு நாட்களில் கொள்முதல் செய்ய வேண்டும். தற்போது நெல் மணிகள் மழையில் நனைந்து கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் 8 கரம்பை கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post தஞ்சாவூரில் மழையால் சாலையில் கொட்டி வைத்த நெல்மணிகள் நனைந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: