டெல்லியில் இன்று நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெறுவதாக இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 12வது கூட்டம் ஒன்றிய நீர் ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் அதிகாரிகள் கலந்துகொள்ள இருந்தனர். 
உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்கு பருவ காலத்தில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீர் குறித்து இன்று விவாதிக்கப்பட இருந்தது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் விரைவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் அறிவிப்பு குறித்தும் இக்கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டிருந்தனர். 
குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்துக்கு 24 டி.எம்.சி. நீரும் கர்நாடகா, மேட்டூர் அணைக்கு திறந்துவிட வேண்டிய நிலையில் இரு மாநில அணைகளிலும் உள்ள நீர் இருப்பு குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட இருந்தது. 
ஆனால் யு.பி.எஸ்.சி.யில் இன்று நடைபெறும் கூட்டத்தில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் கலந்துக் கொண்டுள்ளார். இதன் காரணமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் இன்றைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

The post டெல்லியில் இன்று நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: