டிரைவர் கொலை சம்பவம்; குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல்

திருவெறும்பூர், ஜூலை 9: திருவானைக்காவல் அருகே கோஷ்டி மோதலில் டிரைவரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி திருவானைக்காவல் அருகே திருவளர்சோலையை சேர்ந்தவர் விக்னேஷ்(35). பெட்டிக்கடை வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்(40). திருவளர்ச்சோலையில் பழக்கடை வைத்துள்ளார். முன்விரோதம் காரணமாக விக்னேஷுக்கும், நாகேந்திரனுக்கும் சிலதினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. அப்போது நாகேந்திரன், சங்கேந்தியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து விக்னேஷை தாக்கினார். பதிலுக்கு விக்னேசும் தாக்கினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாகேந்திரன் நண்பரின் ஆதரவாளர்களான டிரைவர்கள் திருவளர்ச்சோலை கீழதெருவை சேர்ந்த நெப்போலியன்(35), கதிரவன்(30), சங்கர்(40), ரமேஷ் மகன் கமலேஷ்(20) மற்றும் சிலர் விக்னேஷிடம் எங்கள் உறவினரை எப்படி அடிக்கலாம் என கூறி கேட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் நெப்போலியன், கதிரவன், கமலேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நெப்போலியன் இறந்தார். ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மருத்துவமனை முன் நெப்போலியன் தரப்பினர் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரங்கம் அரசு மருத்துவமனை முன் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திருவளர்சோலையில் நெப்போலியனின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் ரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தனர். மறியல் போராட்டத்தால் நேற்று காலை திருவானைக்காவல்- கல்லணை சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

The post டிரைவர் கொலை சம்பவம்; குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: