பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்

 

மணப்பாறை, செப்.18: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரையிலான புதிய பேருந்து வழித்தடம் நேற்று தொடங்கப்பட்டது. மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரை இயங்கி வந்த நகர பேருந்து வழித்தடம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் இயங்காமல் இருந்து வந்ததாம். இதனால், அப்பகுதி பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பேருந்தை இயக்கிட வலியுறுத்தி நேற்று இந்து மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தலைவர் ராஜா(எ) வீரசிவமணி மற்றும் புறநகர் மாவட்ட இளைஞரணி செயலர் சங்கர் ஆகியோர் தலைமையில் பழையக்கோட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையின்படி, நேற்று பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறை வரையிலான புதிய பேருந்து வழித்தடம் தொடங்கியது. ராஜா(எ)வீரசிவமணி, சங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மீண்டும் பேருந்து வழித்தடம் கிடைக்கப்பெற்றது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

 

The post பழையக்கோட்டையிலிருந்து மணப்பாறைக்கு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: