ஜூலை மாத பசுந்தேயிலை விலை ரூ.16.85 ஆக நிர்ணயம்

 

ஊட்டி, ஆக. 2: நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை நம்பி சுமார் 65 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். 16 கூட்டுறவு மற்றும் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் உள்ளன. முந்தைய மாத ஏல சராசரி விலையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரும் மாத துவக்கத்திலும், அந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறைைய மாற்றியமைத்து அந்த மாதத்திற்கான தேயிலை விலையை, அந்தந்த மாத இறுதியில் அறிவிக்க வேண்டும் என தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கங்கள், மத்திய வணிக துறையிடம் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் மாத இறுதியில் தேயிலை விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதத்திற்கான பசுந்தேயிலை விலையாக ரூ.16.85 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஜூன் மாத விலையை விட ரூ.1.15 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம் போன தேயிலைத் தூள் விலை அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேயிலை வாரியம் நிர்ணயித்துள்ள இந்த விலையை அனைத்து தேயிலை தொழிற்சாலைகளும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா அல்லது குறைவாக வழங்கப்படுகிறதா என தேயிலை வாரிய அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என தேயிலை வாரியம் செயல் இயக்குநர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.

The post ஜூலை மாத பசுந்தேயிலை விலை ரூ.16.85 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: