‘சோதனை’ காலம்

அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும் புகார் எழுந்தது. குறிப்பாக, சென்னை, கோவை மாநகராட்சிகளில் மட்டும் சுமார் ரூ.810 கோடியளவில் டெண்டரில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வேலுமணி உட்பட பலர் மீது வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்தாண்டு 52 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சூழலில்தான் ேவலுமணியின் கூட்டாளிகள் 2 பேருக்கு சொந்தமான ரூ.110 கோடி மதிப்புள்ள பிக்சட் டெபாசிட்டை முடக்க ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.மதுரையிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. முறைகேட்டில் ஈடுபடுவதற்காகவே உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்ததாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த அதிமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.27 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர். இதனடிப்படையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணம், கிலோ கணக்கில் நகைகள், சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு புகாரில், அவருடன் தொடர்புடைய 57 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும், ஓட்டல், வணிக வளாகங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, கரூரில் உள்ள வீடுகள், ஆதரவாளர்கள் வீடுகள் என 27 இடங்கள், வணிக வரித்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணிக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட இடங்களிலும் ரெய்டு நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் கைப்பற்றிய பணம், நகைகள், ஆவணங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவான பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள் சிறைக்கு செல்வது உறுதியென 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அதிமுகவுக்கு இது ‘‘சோதனைக்காலம்’’ என்றுதான் கூற வேண்டும்….

The post ‘சோதனை’ காலம் appeared first on Dinakaran.

Related Stories: