பண்ருட்டி, ஜன. 19: குப்பையை எரிக்கும்போது, சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தங்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி சின்னபெண்(55). இவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணி அளவில் இவரது வீட்டு வாசலில் உள்ள குப்பைகளை தீ வைத்துக் கொளுத்தினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் ஓடிவந்து போராடி தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பையை எரிக்கும்போது, சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி appeared first on Dinakaran.