செய்யூர்: செய்யூர் அருகே வேகமாக வந்த லாரியால் பைக்கில் சென்ற வாலிபர், நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்தார். இதனால், அப்பகுதி பொதுமக்கள் அவ்வழியாக குவாரிக்கு சென்ற 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நாகமலை பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மண் குவாரி இயங்குகிறது. இங்கிருந்து அரியனூர், பவுஞ்சூர் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் எம்சண்ட் மண்ணை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. அப்போது, கிராமப்புற சாலைகளில் லாரிகள் மிக அதிவேகமாக சென்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று மாலை அரியனூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் தனது பைக்கில் பவுஞ்சூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை வளைவு ஒன்றில் ஒரு லாரி, வேகமாக வந்தது. இதை பார்த்த விஜயன், தன் மீது லாரி மோதி விடும் என்ற அச்சமடைந்தார். அந்த பயத்தில் அவர் நிலைதடுமாறி பைக்குடன் சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில், அவருக்கு உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டன. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காயமடைந்த விஜயனுக்கு முதலுதவி அளித்ததனர். இதற்கிடையில், குவாரி லாரியால் வாலிபர், பள்ளத்தில் விழுந்தார் என ஆத்திரமடைந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர், சாலையில் திரண்டு அவ்வழியாக சென்ற லாரிகளை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதித்தது. பரபரப்பு நிலவியது. தகவலறிந்து செய்யூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது, மணல் குவாரி நிர்வாகத்திடம் பேசி, இதுபோல் விபத்து ஏற்படாமல் தடுப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், மண் குவாரி நிர்வாகத்திடம், போலீசார் சம்பவம் குறித்து எச்சரித்தனர். …
The post செய்யூர் அருகே பரபரப்பு மண்குவாரி லாரியால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் படுகாயம்: கிராம மக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.