சீர்காழி அருகே இயங்கும் தனியார் மண் குவாரியை தடுத்து 7 கிராம மக்கள் போராட்டம்: வாகனங்களை சிறை பிடித்ததால் பரபரப்பு

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காவேரிபூம்பட்டினம் ஊராட்சி குந்திரி மேடு பகுதியில் தனியார் மண் குவாரி கடந்த சில தினங்களாக இயங்கி வருகிறது. அரசின் கனிமவளத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்ற நிலையில், கிராமத்தின் அருகிலேயே பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மண் எடுத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மாசுப்பட்டு கடல் நீர் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிய நிலையில், எஞ்சிய பகுதிகளிலும் கடல் நீர் புகுந்து குடிநீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே இப்பகுதியில் மண் குவாரி இயங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நெய்தவாசல், புதுகுப்பம், கடைக்காடு, மடத்துக்குப்பம், குந்திரி மேடு, வடபாதி, தென்பாதி உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மண் குவாரியை தடுத்து நிறுத்தி லாரி மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரங்களை சிறை பிடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அங்கேயே கொட்டிச் சொல்லி கோரிக்கை விடுத்ததன் பேரில் அள்ளிய மண் மீண்டும் கீழே கொட்டப்பட்டது. சவுடு மண் குவாரி நடத்துபவர்களிடம் மாவட்ட கலெக்டரை சந்தித்து தங்கள் கிராமங்களை பாதுகாக்க கோரி தனியார் மண் குவாரியை தடை செய்ய வலியுறுத்த உள்ளதாகவும், அதுவரை மண் குவாரி இயங்கக் கூடாது எனவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்திய பூம்புகார் போலீசார் மாவட்ட கலெக்டரை கிராம மக்கள் சந்திக்கும் வரை மண் எடுக்க வேண்டாம் என மண் குவாரி நடத்துபவர்களிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் கலைந்து சென்றனர். லாரி மற்றும் ஜேசிபி இயந்திரங்களை 7 கிராம மக்கள் சிறைபிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post சீர்காழி அருகே இயங்கும் தனியார் மண் குவாரியை தடுத்து 7 கிராம மக்கள் போராட்டம்: வாகனங்களை சிறை பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: