சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு மீட்பு

 

மேட்டுப்பாளையம், நவ.19: சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறை, ஊமப்பாளையம், வச்சினம்பாளையம், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் யானை, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

மேலும், ஓடந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாழை பிரதான விவசாயமாக இருந்து வருகிறது.இந்த நிலையில் ஊமப்பாளையம் பகுதியைச்சேர்ந்த வெங்கடேஷ் (52) என்பவருக்கு சொந்தமாக வச்சினம்பாளையம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இங்கு வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல விவசாய நிலத்திற்கு பணியாட்களை வேலைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் வேலை செய்வதை பார்ப்பதற்காக வெங்கடேஷ் சென்றுள்ளார். அப்போது, வாழை சருகுகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பணியாட்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து இதுகுறித்து சிறுமுகை பாம்பு பிடி வீரர் காஜா மைதீன் ((48) என்பவருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற அவர் சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி லாவகமாக பத்திரமாக மீட்டார். இதனையடுத்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் அறிவுறுத்தலின்படி பிடிபட்ட மலைப்பாம்பு வச்சினம்பாளையம் அருகில் அடர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் மலைப்பாம்பு மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: