சவுதி கப்பல் மோதி இறந்த மீனவர் உடலை கொண்டு வரவேண்டும்: குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு

 

ராமநாதபுரம்,ஆக.7: சவுதி கடற்படை கப்பல் மோதி இறந்த ஆர்.எஸ்.மங்கலம் மீனவரின் உடலை கொண்டு வர குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் மருதமலை. இவரது மனைவி விஜயசாந்தி குடும்பத்துடன் நேற்று கலெக்டரிடம் மனு அளித்தார். இதுகுறித்து விஜயசாந்தி கூறும்போது, ‘‘மீனவரான எனது கணவர் மருதமலை, பக்ரைனில் மீன்பிடி தொழிலுக்காக ஒப்பந்த தொழிலாளராக சென்றார்.

நேற்று முன்தினம் இரவு கடலில் மீன் பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த சவுதி கடற்படை, கைது செய்யும் நோக்கில் விரட்டி மீனவர்கள் சென்ற படகில் மோதி படகை மூழ்கடித்துள்ளனர். இதனால் படகில் இருந்த எனது கணவர் மருதமலை கடலில் மூழ்கி இறந்துள்ளார். கணவர் இறந்ததால் எனது குடும்பம், வாழ்வாதாரம் இன்றி எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது.

எனக்கு பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளும், 62 வயதான மாமியாரும் உள்ளனர். எனது கணவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடும்ப நலன் கருதி, அரசு நிவாரண தொகையை வழங்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.

The post சவுதி கப்பல் மோதி இறந்த மீனவர் உடலை கொண்டு வரவேண்டும்: குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: