திருக்கழுக்குன்றம், ஜூன் 3: சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் அருகே, பனந்தோப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 200 பனை மரங்கள் கருகின. மேலும், 15க்கும் மேற்பட்ட பைக்குகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் கிழக்கு கடற்கரை சாலையருகே சதுரங்கப்பட்டினம் சட்டம் – ஒழுங்கு காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் மற்றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் காவல் நிலையம் அருகே உள்ள அரசு புறம்போக்கு வகைப்பாடுள்ள இடத்தில் பனந்தோப்பின் நடுவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று அந்த பனந்தோப்பில் திடீரென்று தீப்பிடித்தது எரிய தொடங்கியது.
முதலில் மெதுவாக எரிய தொடங்கிய தீ, வெயில் மற்றும் காற்றின் வேகத்தில் காட்டுத் தீயாய் மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்ததில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் முற்றிலும் எரிந்துப் போனது மட்டுமின்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் எரிந்து நாசமாகின.
இது குறித்து உடனே சதுரங்கப்பட்டினம் போலீசார் தீயணைப்பு துறையினரை வரவழைத்து தீயை அணைத்தனர். எனினும் மனை மரங்களும், வாகனங்களும் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் அருகே பனந்தோப்பில் திடீர் தீவிபத்து: 200 மரங்கள் கருகின, பறிமுதல் வாகனங்கள் நாசம் appeared first on Dinakaran.