சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் தமிழகத்தில் ஆக்கிரமிப்பு என்பதே இருக்காது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளே இருக்காது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொன்னேரி வட்டத்தில் ஆரணியாற்றில் தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வணிக வளாகங்களையும், வீடுகளையும் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் என்று தெரிந்தும் அப்புறப்படுத்துவதில் என்ன சிரமம் உள்ளது. ஒவ்வொரு ஆக்கிரமிப்பையும் நீதிமன்றம் உத்தரவுக்கு பின்பு தான் அகற்றுவீர்களா. நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அதிகாரிகள் தங்களை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டாம். சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் தமிழகத்தில் ஆக்கிரமிப்புகள் என்பதே இருக்காது. புகார் அளித்தவரும் இறந்து விடுவார், அதிகாரிகளும் மறந்து விடுவார்கள், ஆனால் ஆக்கிரமிப்புகள் மட்டும் தொடரும். அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

The post சட்டத்தை முறையாக அமல்படுத்தினால் தமிழகத்தில் ஆக்கிரமிப்பு என்பதே இருக்காது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: