சங்கரன்கோவில் நகர்ப்பகுதி பேருந்து நிறுத்தங்களில் பஸ்கள் முறையாக நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் நகர்ப்பகுதி பேருந்து நிறுத்தங்களில் பஸ்கள் முறையாக நின்றுசெல்லுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சங்கரன்கோவிலில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பஸ் நிலையம் விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. இதன்காரணமாக சங்கரன்கோவில் புதிய நகராட்சி அருகேயுள்ள இடத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.இருப்பினும் இந்த பஸ் நிலையமானது, நகர்ப்பகுதியில் இருந்து அதிக தொலைவு என்பதால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் நகர்ப்பகுதியில் ஆங்காங்கே ஏற்கனவே உள்ள நிறுத்தங்களில் காத்திருந்து எதிர்வரும் பஸ்சில் ஏறி பயணம் செல்லும் நிலை உருவானது. ராஜபாளையம், நெல்லை, தென்காசி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் அரசு மருத்துவமனை, தேரடி பகுதி, சங்கரன்கோவில் மெயின்ரோடு, பயணியர் விடுதி அருகில் மற்றும் முப்புடாதி அம்மன் கோயில் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிஇறக்கி செல்கின்றன.இருப்பினும் பிரதான சாலையான ராஜபாளையம் சாலையில் இருந்து புதிய தற்காலிக பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் உள்ள அண்ணா நகர் பகுதி பஸ் நிறுத்தம் உள்ளிட்ட குறிப்பிட்ட பேருந்து நிறுத்த பகுதிகளில் நிற்காமல் ஒரு சில பஸ்கள் புறக்கணித்து செல்கின்றன. இவ்வாறு சம்பந்தப்பட்ட பகுதிகளில்  பஸ்களை ஓட்டுநர்கள் நிறுத்தாமல் செல்வதால் அலுவலக பணிக்கு செல்வோர், வியாபாரம் நிமித்தமாக வெளியூர் செல்வோர்  உள்ளிட்ட பல்வேறு பயணிகள் நீண்ட நேரம் நடந்து சென்று பஸ்சில் பயணம் செய்யும்  சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.எனவே, இதுவிஷயத்தில் காவல்துறையினர் தலையிட்டு முறையான நிறுத்தங்களை தேர்வு செய்து அந்த நிறுத்தங்களை பஸ்களை நிறுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து அரசுப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தனியார் போக்குவரத்து நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். தேவைபட்டால் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நகர்ப்பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கவும் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் சங்கரன்கோவிலில் இருந்து வாசுதேவநல்லூர் செல்லும் அரசு பஸ் தெற்கு வீதி நிறுத்தத்தில் நிறுத்தாமல் 200 மீட்டர் தள்ளி சென்று நிறுத்தப்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை சுமார் 70 பயணிகள் உள்ளிட்டோர் வேகமாக ஓடிச் சென்று பஸ்சில் ஏறினர். மேலும் விபத்து அபாயமும் உருவானது. எனவே இதை தவிர்க்க காவல்துறையும், அரசு மற்றும் தனியார்  போக்குவரத்து நிர்வாகமும்  முறையான நிறுத்தங்களில் பயணிகளுக்கு பாதிப்பின்றி பஸ்களை நிறுத்திச் செல்ல விரைவில் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்….

The post சங்கரன்கோவில் நகர்ப்பகுதி பேருந்து நிறுத்தங்களில் பஸ்கள் முறையாக நின்று செல்லுமா? பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: