அக அழுக்கு நீக்கும் புனித தீர்த்தங்கள்: தாமிரபரணியை கொண்டாடுவோம்

நீராடல் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. புகழ்பெற்ற காக்கை குளியலாகட்டும், ஆறறிவு மனிதர்களின் அன்றாட குளியலாகட்டும் எல்லாமே ஒரே நோக்கம் கொண்டவை..... புற உடலில் பற்றியுள்ள அழுக்கை அகற்றுவது மட்டுமே அதன் முக்கிய நோக்கம். ஆனால் தீர்த்தமாடல் என்பது அதுவல்ல. புனிதத்துவம் பெற்ற ஒரு நதியில் இறைவனே விரும்பி நீராடும் இடங்கள் தீர்த்தக்கட்டங்களாக விளங்குகின்றன. அந்த இடத்தில் நாம் நீராடவது உடலின் புற அழுக்கை நீக்க அல்ல, மனதில் பீடித்திருக்கும் அக அழுக்கை நீக்கி, நம் பாவங்களைப் போக்கி இறைவனின் திருவருள் பெறவும், முன்னோர்க்கு பித்ரு கடன் செய்யவும் உதவும் அற்புத குளியலாகும்.

இதற்காகவே தீர்த்தக்கட்டங்களில் நீராட நம் முன்னோர் அனைவரையும் வலியுறுத்தி ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். பூங்குளத்தில் துவங்கும் தாமிரபரணியில் ஏறத்தாழ 144 தீர்த்த கட்டங்கள் உள்ளன. அதில் 32 தீர்த்த கட்டங்கள் பொதிகைமலையில் உள்ளது.  இதனை தேவர்களும், சித்தர்களும், ரிஷிகளும் பயன்படுத்துவர். மீதமுள்ள 112 தீர்த்த கட்டங்கள் தாமிரபரணி பாயும் வனவெளி பகுதியில் உள்ளது. இவை அனைத்தும் நமக்காக உருவாக்கப்பட்டவை. இதில் பாண தீர்த்தம், நாதம்புஜம் (சேரன்மகாதேவி), பிரமாரணியம் (ஸ்ரீவைகுண்டம்), ராமபுரம் (ஆழ்வார்திருநகரி), கோட்டிசுவரம் (ஊர்க்காடு), புடார்ச்சனம் (திருப்புடைமருதூர்), வேணுவனம் (நெல்லை), நதிப்புரம் (ஆத்தூர்) போன்ற பல தீர்த்த கட்டங்கள் அனைத்துப் பாவங்களையும் போக்க வல்லமை பெற்றதாகும்.

தாமிரபரணியில் ஊர்ஜஸ் தீர்த்தம், இஷா தீர்த்தம், விருஷாங்க தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சக்கர தீர்த்தம், பாண தீர்த்தம், வாமன தீர்த்தம், ரேம்ப தீர்த்தம், நரசிங்க தீர்த்தம், போகி ராஜ தீர்த்தம், பாஞ்சஜன்ய தீர்த்தம், வராக தீர்த்தம், சக்கரசீலா தீர்த்தம், முனி தீர்த்தம், பிசங்கிலா தீர்த்தம், கன்னியா தீர்த்தம், வருணா தீர்த்தம், ராமதீர்த்தம், கால தீர்த்தம், கல்யாண தீர்த்தம், நாரத தீர்த்தம், வருண தீர்த்தம், (அகத்தியர் அருவி), பிராசேதல தீர்த்தம், தும்புரு தீர்த்தம், பருவத்தீர்த்தம், பாபநாசத்தில் இந்திரசீல தீர்த்தம், திரிநதி சங்கம தீர்த்தம், தீப தீர்த்தம், சாலா தீர்த்தம், காசிப தீர்த்தம், கண்ணுவ தீர்த்தம், பிருகு தீர்த்தம், என தீர்த்தங்களின் பெயர்  நீண்டு கொண்டே செல்கிறது.

பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வேத தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், பாபநாசம் தீர்த்தம். அம்பையில் காசிப தீர்த்தம், ஊர்க்காட்டில் கோட்டிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூர் புடாச்சன தீர்த்தம், குறுக்குத்துறை வேணுவன தீர்த்தம், அருகன்குளம் அருகே ஜடாயு தீர்த்தம், ஆத்தூர் அருகே உள்ள நதிப்புர தீர்த்தம் உள்பட சில தீர்த்த கட்டங்கள் மிக முக்கியமானவை, பிரசித்தி பெற்றவை. எந்த தீர்த்தக்கட்டத்தில் எந்த மாதம் நீராட வேண்டும் என்ற குறிப்பையும் நமது முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். பாபநாச தீர்த்தம்,  அகத்தியர் தீர்த்தம், பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், போன்ற தீர்த்தத்தில் சித்திரை  மாதம் மற்றும் ஆடி மாதம் நீராடுவது நல்லது. திருப்புடைமருதூரில் உள்ள சுரேந்திர மோட்ச தீர்த்தத்தில் வைகாசி மாதமும், அதே ஊரில் உள்ள சோம தீர்த்தத்தில் ஆனி மாதம் நீராடி நற்பயன் அடையலாம்.

சிந்துபூந்துறையில் உள்ள தீர்த்தத்தில் ஆவணி மாதமும், ஸ்ரீவைகுண்டம் விஷ்ணு தீர்த்தத்தில் புரட்டாசி மாதமும், நீராடினால் நற்கதி அடையலாம். ஐப்பசி மாதம் ஆழ்வார்திருநகரியில் உள்ள துர்கா தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வது மிக நன்று. இரட்டை திருப்பதி ஜடாசல தீர்த்தத்தில் கார்த்திகை மாதத்திலும், சேரன்மகாதேவி வியாசர் தீர்த்தத்தில் மார்கழி மாதத்திலும் நீராடி நற்பலன் பெறலாம். செப்பறை புரட்டன தீர்த்தம், பாலாமடை மகா தீர்த்தம் ஆகிய இடங்களில் மாசி மாதமும், பச்சையாறு சங்கமிக்கும் தருவை மந்திர தீர்த்தத்தில் பங்குனி மாதமும் புனித நீராடி நன்மை அடைந்து கொள்ளலாம். 144 தீர்த்தக் கட்டங்களுக்கும் வரலாறு உள்ளதா என தேடி பார்த்தால், கிடைப்பது அரிதுதான்.

அதேபோல் தாமிரபரணி மகாத்மியத்தில் கூறப்படும் பல வரலாறு தாமிரபரணியில் எங்கு நடந்தது என தேடி கண்டுபிடிப்பதும் சற்று கடினம்தான். ஆனாலும் தாமிரபரணி கரையெங்கும் காணப்படும் ஆலயங்களில் வரலாறுகள் கூறப்படுகிறது. அதுவே தாமிரபரணியின் பெருமையை இந்த மண்ணுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களின் வரலாறு என்ன?

(நதி வற்றாமல் ஓடும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: