கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆசிரியர், மாணவர்கள் பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும்-இணை கல்வித்துறை அதிகாரி பேச்சு

சித்தூர் : கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் என்று இணை கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சித்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘நம் பள்ளிக்கு போவோம்’ திட்டத்தின்கீழ் மண்டல கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட இணை கல்வித்துறை அதிகாரி வெங்கட ரமணா தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: ்அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து சேர்க்கை நடத்த வேண்டும். குறிப்பாக கிராமங்களில் ஊரை விட்டு ஊர் வந்த தொழிலாளர்கள் செங்கல் சூளை, கல்குவாரி, சிறுசிறு தொழிற்சாலை மற்றும் விவசாய நிலங்களில் வேலை செய்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றோர்களுடன் வந்து விடுவதால் பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களுடன் பணிக்கு வைத்துக்கொள்கின்றனர். அந்த குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். பெற்றோர்கள் பேருந்து வசதியின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். அந்த பிள்ளைகளை நாள்தோறும் ஆட்டோவில் அழைத்துச்சென்று பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆட்டோவிற்கு வழங்கப்படும் கட்டணம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செலுத்தப்படும். பெற்றோர்களிடம் ஆட்டோ மற்றும் பஸ் கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மண்டல கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளிக்குச் செல்லாத மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.மேலும், எத்தனை மாணவர்களை பள்ளியில் சேர்த்தார்கள் என்று அறிக்கையை மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். சித்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் முகக்கவசம் இல்லாமல் பள்ளிக்கு வருவதாக ஏராளமான புகார்கள் வந்தது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதேபோல், வகுப்பறைக்கு முன்பு கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.  ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்தந்த மண்டல கல்வித்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து சிகிச்சை எடுத்க்கொள்ள வேண்டும். வகுப்பறையில் அனைத்து மாணவ, மாணவிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில், கூடுதல் இணை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் புருஷோத்தம், ஜெயக்குமார், குணசேகர், மோகன்சிங் மற்றும் மாவட்ட இணை சுகாதாரத்துறை அதிகாரி ரமாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆசிரியர், மாணவர்கள் பள்ளிக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும்-இணை கல்வித்துறை அதிகாரி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: