கேளம்பாக்கம் அருகே கேபிள் புதைக்கும்போது குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல்

 

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே கேபிள் புதைக்கும் பணியின்போது, குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கேளம்பாக்கம் உள்ளிட்ட ஓஎம்ஆர் சாலையில் இன்டர்நெட் கேபிள் புதைக்கும் பணி இரவு நேரங்களில் நடைபெறுகிறது. இந்த பணியில் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டவர்கள் கேளம்பாக்கம் பழைய மாமல்லபுரம் சாலையில் மசூதி அருகே சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து பெருங்குடி செல்லும் குழாயை உடைத்து விட்டனர்.

இதனால் நள்ளிரவில் குழாய் உடைப்பினால் தண்ணீர் வெளியேறி சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு அதைச் சுற்றிலும் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில், தையூரில் உள்ள கடல் குடிநீர் நீரேற்று நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும் சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் உருவானதால் திருப்போரூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், தையூர் வீராணம் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. ஓஎம்ஆர் சாலையில் ஒருவழிப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வரிசை கட்டி நின்றது. இதனால், காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி – கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குளாகினர். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்போது, சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடி குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்த பிறகே போக்குவரத்து நெரிசல் சீராகும் என போலீசார் தெரிவித்தனர்.

The post கேளம்பாக்கம் அருகே கேபிள் புதைக்கும்போது குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Related Stories: