குழந்தையின் வளர்ச்சிப் பாதை… பெற்றோர்களே நில், கவனி, செல்!

நன்றி குங்குமம் தோழி குழந்தை இருக்கும் வீடு என்றாலே தனி அழகுதான். ஆனால் குழந்தை பிறந்த முதல் மாதங்களில் உண்பது, உறங்குவது, அழுவது என்றே இருக்கும். இதைப் பார்க்கும் வளர்ந்த பிள்ளைகள் ‘எப்பப் பாரு பாப்பா ஏன்ம்மா தூங்கிட்டே இருக்கு’ என்று சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அதன் பின்னர் குழந்தையின் தலை நிற்பது முதல் நடப்பது வரை, ‘கூகூ’ என கத்துவது முதல் தெளிவாய் சரளமாய் பேசுவது வரை, அம்மா முகத்தை மட்டும் பார்த்து சிரிப்பது முதல் தெரியாதவர்களிடம் எளிதில் பேசிப் பழகுவது வரை.. என ஒவ்வொன்றும் செய்யச் செய்ய நம் ஆர்வமும், மகிழ்வும் இன்னும் அதிகமாக மாறும்.இவ்வாறு குழந்தைகளில் நிகழும் மாற்றங்கள், அவை எந்தெந்த மாதத்தில் நிகழும் என்பதனையும், அவை நிகழாமல் போனால் என்ன பாதிப்பு வரும், அதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பதனையும் அனைத்துப் பெற்றோர்களும், குழந்தை வளர்ப்பவர்களும், வீட்டில் உள்ள மற்ற சொந்தங்கள் என யாவரும்; அறிய வேண்டியது மிக அவசியமாகிறது.குழந்தையின் வளர்ச்சிப் பாதை!உடல் வளர்ச்சி (physical), மன வளர்ச்சி (brain), மனதின் திறன் சார்ந்த (intellectual) வளர்ச்சி, மனதின் உணர்ச்சிகள் சார்ந்த (emotional) வளர்ச்சி என பல வளர்ச்சிகள் ஒருங்கே கொண்டது தான் குழந்தையின் வளர்ச்சிப் பாதை. இவற்றில் ஏதேனும் ஒன்றில் குழந்தைக்கு தாமதம் ஏற்பட்டாலும் உடனடியாகப் பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அவ்வாறு எடுக்காத பட்சத்தில் அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகக்கூடும். அப்படிப்பட்ட குழந்தையின் வளர்ச்சிப் பாதையில் ஒன்றான உடல் வளர்ச்சி சார்ந்து, அதாவது தலை நிற்பது முதல் நடப்பது, ஓடுவது வரை சற்று விரிவாகப் பார்க்கலாம்.இரண்டு மாதம் முடியும் போது…*கை கால்களை நன்கு அசைத்து விளையாட வேண்டும்.*தானாக ஒருக்களித்து படுக்க; வேண்டும்.*கவிழ்ந்து படுக்க வைத்தால் கைகளை தலை அருகே மேலே கொண்டு வந்து கை ஊன்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.*கழுத்து 30 சதவீதம் நின்றிருக்க வேண்டும்.நான்கு மாதம் முடியும் போது…*நாம் கை வைத்து தாங்காமலே கழுத்து முழுவதுமாக நின்றிருக்க வேண்டும்.*உடம்பை பிடித்துக் கொண்டு தரையில் கால் பதியும் படி செய்தால், கால்களை மேலும் கீழுமாக தரையில் ஊன்றி ஊன்றி அசைக்க வேண்டும்.*கவிழ்ந்து படுக்க வைத்தால் தலையைத் தூக்கிப் பார்க்க வேண்டும். முகம் மேலே பார்த்தவாறு படுக்க வைத்தால் தானாகவே ஒருக்களித்து கவிழ்ந்து படுக்க வேண்டும்.*சிறு பொம்மைகளை கையில் வைத்து விளையாட வேண்டும்.*கண் பார்வை நிலையாய் பொருட்களை, மனிதர்களைப் பார்க்க வேண்டும்.ஆறு மாதம் முடியும் போது…*மல்லாந்து படுக்க வைத்தால் முழுமையாக கவிழவும், கவிழ்ந்து படுக்க வைத்தால் முழுமையாய் மல்லாந்து படுக்கவும் செய்வர்.*தலையனை, தாயின் மடி போன்றவற்றின் உதவியுடன் உட்கார முடியும்.*தவழ ஆரம்பித்து இருக்கும்.ஒன்பது மாதம் முடியும் போது…*எதையாவது பிடித்து நிற்க முடியும்.*படுத்த நிலையில் இருந்து எழுந்து தனியாக உட்கார முடியும்.*தவழ்வது சுலபமாகவும், வேகமாகவும் இருக்கும்.முதல் பிறந்த நாள் (ஒரு வருடம்) முடியும் போது…*எதையாவது பிடித்துக் கொண்டு நடக்கப் பழகும்.*தனியாக நிற்க முடியும்.ஒன்றரை ஆண்டு முடியும் போது…*தனியாக நடக்க முடியும்.*படிகளில் கைப்பிடி உதவியுடன் ஏற முடியும்.*ஓட முடியும்.*உடைகள் மாற்றுவதற்கு ஏதுவாக கால், கைகள் தூக்குவது போன்ற உதவிகள் செய்வார்கள்.*கப்பில் இருக்கும் தண்ணீரை தானாய்க் குடிக்க முடியும்.*சாப்பிடும் கரண்டியின் உதவியுடன் தானாகச் சாப்பிடுவது.இரண்டு வருடம் முடியும் போது…*கால் விரலில் கூட நிற்க முடியும்.*பந்தை உதைப்பது.*சோபா, நாற்காலி போன்றவற்றில் தானாய் ஏறி இறங்குவது.மூன்று வயது முடியும் போது…*மூன்று சக்கர மிதிவண்டி ஓட்டுவது.நான்கு வயது முடியும் போது…*ஒற்றைக் காலில் குதிப்பது.*ஒரு காலில் நிற்பது.*எதிராளி பந்து வீசும் போது பிடிப்பது.*தன் சாப்பாட்டை தானே பிசைந்து சாப்பிடுவது.ஐந்து வயது முடியும் போது…*தானாய் பல்டி அடிப்பது.*பாட்டிலில் தண்ணீர் ஊற்றுவது.*பழம் நறுக்குவது.*தனியாய் கழிவறையை பயன்படுத்த முடிவது.தாமதம் ஆவதால் வரக்கூடிய பாதிப்புகள்..?உதாரணமாக, கவிழ்ந்து படுக்க இயலும் குழந்தை அடுத்தபடியாக தவழ்வதில் தாமதமானால் அதன் பின் உட்காருவது, எழுந்து நிற்பது, நடப்பது எனும் பகுதிகளும் தாமதம் ஆகும். இதனால் மொத்த வளர்ச்சியும் பாதிப்படையும்.குழந்தைகளின் 90 சதவிகித வளர்ச்சி பிறந்தது முதல் ஐந்து வருடங்களுக்குள் நிகழும். இதனால் இவ்வளர்ச்சிப் படிநிலையில் தாமதமானால் முழு வளர்ச்சியும் பாதிப்படையும் என்பது குறிப்பிடத்தக்கது.அதேப்போல மற்றக் குழந்தைகளுடன் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. ஒரே வீட்டில் கூட இரு குழந்தைகள் வெவ்வேறு மாதத்தில் தவழ்ந்திருக்கலாம், நடந்திருக்கலாம் என்பதால் மேலே சொன்னது போல் அதே மாதத்தில் தான் நிகழ்வுகள் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில குழந்தைகள் ஒரு மாதம் முன்பே நடந்துவிடலாம், சில குழந்தைகள் ஒரு மாதம் தாமதமாகியும் நடக்கலாம்.தாமதம் ஆவதற்கான காரணங்கள்..?*மூளை வாதம்.*மரபியல் காரணிகள்.*குழந்தைகளுக்கு வரும் பக்கவாதம்.*குழந்தைகளை ஆரம்பம் முதலே விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ப்பதால் உண்பது, டிவி, தொலைபேசி பார்ப்பது, உறக்கம் என அவர்கள் வழி மாறிப் போவது.*குறித்த தேதிக்கு முன்னரே சில மாதங்கள் முன்பு (pre mature birth) குழந்தை பிறப்பதால்.*இவற்றோடு… காரணங்கள் இல்லாத தாமதமும் நிகழலாம்.இயன்முறை மருத்துவத்தின் பங்குகுழந்தை படுத்திருப்பதில் இருந்து உட்கார்ந்து, எழுந்து நின்று நடந்தால் தான் மேல் சொன்ன மன வளர்ச்சி, மனதின் திறன் சார்ந்த வளர்ச்சி, மனதின் உணர்ச்சிகள் சார்ந்த வளர்ச்சி என யாவற்றும் பூர்த்தி ஆகும். இவ்வாறு உடல் அசைவுகள் தாமதம் ஆகும் குழந்தைகளுக்கு இயன்முறை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சிகளும், நுட்பங்களும் வழங்குவோம். அதனால் அவர்கள் எந்த படிநிலையில் தாமதம் ஆனார்களோ அந்த படிநிலையில் இருந்து மீண்டும் மேலே செல்வார்கள். தசைகள் வலிமை பெறுவதற்கு பயிற்சிகள் வழங்கப்படுவதால் எளிதில் குழந்தைகள் தாமதமான மைல்கற்கள் அனைத்தையும் எட்டி வெற்றி அடைவர்.எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி மட்டும் தான் முக்கியமானது என்று நினைக்காமல் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் ‘குழந்தையின் வளர்ச்சிப் பாதை’யில் எந்தவிதமானப் பிரச்னைகள் வந்தாலும் அதை முன்னரே கண்டறிந்து தீர்வு காணுவதற்கு உதவியாய் இருக்கும்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
தொகுப்பு: அன்னம் அரசு
படங்கள்: ஜி.சிவக்குமார்

The post குழந்தையின் வளர்ச்சிப் பாதை… பெற்றோர்களே நில், கவனி, செல்! appeared first on Dinakaran.

Related Stories: